பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

684

நாடக மேடை நினைவுகள்


(Deep breathing) என்பதை ஐந்தாறு முறை அப்யசித்து, அரங்கத்திற்குள் பிரவேசிக்க வேண்டியவனாயினேன். இதற்கு முக்கியக் காரணம், இத்தனை வருடங்களாகியும், ஏதாவது புதிய நாடகத்தில் முதன் முறை ஆடுவதென் றாலும் அல்லது புதிய ஆக்டர்களுடன் ஆடுவதென்றாலும், எப்படியிருக்குமோ என்னும் பீதி, என்னைவிட்டு இன்னும் அகலாதிருப்பதே.

நான் மேடையில் தோன்றியதும் நிசப்தமாய் எல் லோரும் - என்னைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கண்டவனாய், என்னாலியன்ற அளவு முயன்று நன்றாய் நடித்துச் சபையோரை சந்தோஷிப்பிக்கப் பார்த்தேன். நான் அன்று நடித்த அர்ஜுனன் பாகம் மிகவும் சிறியது. அதை, சரியாக நடிக்காது ரசாபாசம் செய்வது சுலபம்; அதில் பெயர் எடுப்பது கஷ்டம். இந்நாடகத்தில் அர்ஜுனன் தோன்றும் இரண்டு காட்சிகளில் முதற் காட்சியாகிய இதில், சுபத்திரை தன்னை வஞ்சித்துத் தன்னிடமிருந்து வரம் பெற்றாள் என்பதை அறிந்த அர்ஜுனன், தன் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்து “சுபத்திரை!” என்று கூறுமிடம், இதை நடிக்கும் ஆக்டர்களுக்கு ஒரு கட்டம். இந்த கட்டத்தில் தவறுவானாயின் அந்த ஆக்டர் ஒழிந்தவனே இந்நாடகத்தில்; பல ஆக்டர்கள், இந்த ஒரு பதத்தைச் சரியாக ஆக்டு செய்யத் தெரியாது ரசாபாசஞ் செய்ததைப் பன்முறை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் கட்டம் வந்த பொழுது, கொட்டகையிலிருந்த ஜனங்களெல்லாம் ஒரே கரகோஷம் செய்தபொழுது, இந்தக் கட்டத்தில் நாம் தவறவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இந்த ஒரு வார்த்தையைக் கூறுமிடத்து, ஸ்ரீ கிருஷ்ணனுடன் போர் புரிய வேண்டுமே என்ற பயமுமிருக்க வேண்டும்; அப்படிச் செய்தவள் தன் ஆருயிர்க் காதலியாகிய கண்ணன் தங்கை என்னும் பரிவும் இருக்க வேண்டும்! இம் மூன்று ரசங்களையும் ஒருங்கே முகத்திலும், வாய்ச் சொல்லிலும் காட்டுவதுதான் கடினம். இதை இந்த அர்ஜுனன் வேடம் பூணும் எனது இளைய நண்பர்கள் கவனிப்பார்களாக.

இனி அன்றைத் தினம் என்னுடன் அரங்கத்தின்மீது நடித்த எனது புதிய நண்பர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். “காலவ ரிஷி” என்னும் நாடகத்திற்குத்