பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

685


தெலுங்கில் “சித்திரசேனோ பாக்கியானம்” என்று பெயர். இதன் கதாநாயகன், சித்திரசேனனே. அன்று இச் சித்திரசேனன் வேடம் பூண்டவர் எனது புதிய நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் என்பவர். இதற்கு முன்பாக நான் மதுரைக்கு வந்திருந்தபொழுது, இவர் என்னைக் கண்டு என்னுடன் சம்பாஷித்திருப்பதாக இவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அது நான் எவ்வளவு யோசித்துப் பார்த்தபோதிலும் என் நினைவிற்குக் கொஞ்சமேனும் வரவில்லை. நான் இம்முறை மதுரைக்கு வந்தபொழுது, ரெயில் வண்டியை விட்டிறங்கியது முதல், ஒருவருக்கொருவர் பரிச்சயமாகி, விரைவில் சிநேகிர்களாகி விட்டோம். மதுரையில் எனக்குக் கிடைத்துள்ள ஆப்த மித்திரர்களில் இவர் ஒரு முக்கியமானவர் என்றே நான் கூற வேண்டும். இவ்வளவு வெகு சீக்கிரம் நாங்கள் நண்பர்களாகி விட்டதற்குக் காரணம், எனக்கிருப்பது போல் இவருக்கு முள்ள “தமிழ் நாடகப் பைத்தியமே!” இவர் மதுரையில் பிரபலமான வக்கீலாயிருந்த, காலஞ் சென்ற மாது ஐயர் அவர்கள் இரண்டாவது குமாரர்; என்னைப்போல் இள வயது முதல் தமிழ் நாடக மேடையின் மீதுள்ள பிரீதியால், அதில் தன் காலத்தைப் பெரும்பாலும் கழித்தவர். இந்த மதுரை டிராமாடிக் கிளப்பைச் சேருமுன், இரண்டொரு நாடக சபைகளில் நடித்திருக்கிறார் எனப் பிறகு அறிந்தேன். இவரிடம் நான் கண்ட ஒரு முக்கியமான குணம் என்ன வென்றால், நாடகமேடையில் ஒருவன் என்னென்ன கற்கக் கூடுமோ அவ்வளவையும் கற்க வேண்டும் என்னும் ஊக்கமே. யாராவது ஒரு ஆக்டரிடமிருந்து ஏதாவது கற்கவேண்டுமென்றிருந்தால் ஐம்பதல்ல, நூறு மைலாவது, தன் மோட்டார் வண்டியிற் போய்க் கற்று வருவார். என்னிடமிருந்து இவர் கற்க வேண்டியது அதிகமில்லாவிட்டாலும், என்னைச் சந்திக்கும் போதெல்லாம் (இதன் பிறகு இதுவரையில் மதுரைக்கு ஏழெட்டு தரம் போயிருக்கிறேன்; அச் சமயங்களிலெல்லாம், ஒரு நாளாவது இவர் என்னைப் பாராத நாளில்லை), ஏதாவது என்னிடமிருந்து அறிய விரும்புவார். இப்படிப்பட்ட “சிஷ்யர்கள்” எனக்கு அதிகமாயிராதது ஒரு விதத்தில் நலமாம்; இல்லாவிட்டால், எனக்கு உண்ணுவதற்கும் உறங்குவதற்கும்கூட அவகாசமிராமல் போம்!