பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688

நாடக மேடை நினைவுகள்


உருவமும் குரலும், சங்கீத ஞானமும் நடிக்கும் திறமும் எல்லாம் இவரிடம் இயற்கையாய் அமைந்திருக்கின்றன.

இன்று இந் நாடகத்தில் நாரதராக வந்தது டாக்டர் பி.சி. சீதாராம் அய்யர்; இவருக்கு இவ்வேடம் பலவிதத்திலும் பொருந்தியதாயிருந்தது. நாரதர் உருவம் சற்றுக் குறுகிய தாயிருக்க வேண்டுமென்று எப்பொழுதும் நான் எண்ணினவன்; இதற்கிசைந்தபடி எனது புதிய நண்பராகிய சீதாராம அய்யர் என்னைவிட சற்றுக் குட்டையானவர். இவர் சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். தனியாகக் கச்சேரி பண்ணும்படியான சக்தியும் உடையவர்; ஆயினும் இவர் நாடக மேடைமீது வரும்பொழுது, இவரது பாட்டுகள் இவரது சங்கீதத் திறமைக்கேற்றபடி அவ்வளவு சோபிப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம்; எனது மதுரை நண்பர்களில் பலரும் இப்படியே அபிப்பிராயப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இவர் நாடக மேடையில் பாடும் பொழுது, சங்கீதத்தின்மீதே மனத்தைச் செலுத்தி பாட்டிற்குத் தக்கபடி நடிக்க வேண்டும் என்பதை அவ்வளவாகக் கவனிப்பதில்லை யென்பதாயிருக்கலா மென என் புத்திக்குப் படுகிறது; இதை என் நண்பராகிய இவர் கொஞ்சம் கவனிப்பாராயின், நாடக மேடையில் நல்ல பெயர் பெறுவார் என்பது என் அபிப்பிராயம்.

இந் நாடகத்தில் ஹாஸ்ய பாகத்திற்காக நான் எழுதி வைத்த ‘மண்டு’, ‘கமண்டு’ என்னும் இரு பாத்திரங்களும் சற்றுக் குண்டாக இருக்க வேண்டுமென்பது என் எண்ணம்; அதற்கிசைந்தபடி இச் சபையாரால் இந் நாடகத்தை நடத்தியபொழுது, இந்த இரண்டு பாத்திரங்களுக்கும் மெலிவடைந்தவர்களாயிராத் இருவர் கிடைத்தது எனக்கே திருப்தியையும் நகைப்பையும் தந்தது.

ரத்னாவளி வேடம், வக்கீலாகிய வெங்கடாச்சாரியார் * எடுத்துக் கொண்டார். இவர் இந்நாடகத்திற்கு வருவதற்காக, நாச்சியார் கோயிலிலிருந்து வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக சதுர் ஆடுவதில் வல்லமை வாய்ந்தவர். ‘ரத்னாவளி’ பாத்திரத்தில் யாரும் பெயர் எடுப்பது கடினம் என்பதைப்பற்றி முன்பே நான் எழுதியிருக்கிறேன்.