பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

692

நாடக மேடை நினைவுகள்


கூறினவர்கள் சொன்னதே, நான் எடுத்துக் கொண்ட கொஞ்சம் சிரமத்திற்குத் தக்க பரிசாகும். இதற்குப் பிறகு இந்த நாராயண ஐயர் மதுரைவாசிகளுள் எனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவரானார்.

இந்த நாடகத்தில் மிகவும் சிறிதான ஒரு பாகம், “ஜீமுத வாஹனன்” என்னும் மிருகங்களைப் பயிற்றுவிக்கும் ஒருவனுடையதே. இப் பாத்திரத்தை ஹைகோர்ட் வக்கீல் எம். ஈஸ்ர அய்யருக்குக் கொடுத்திருந்தது. இந்தப் பாகத்தில் பேச வேண்டிய வார்த்தைகள் பத்து வரிக்கு அதிகமிராது. ஆயினும் அவைகளைத் தக்கபடி பேசி இப் பாத்திரத்தை வெகு விமரிசையாய் நடித்தார். இதைப்பற்றி நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இவர் உருவத்தில், ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கலியாணத்தில், வைகையாற்றை உண்ட சிவ பக்தனுக்குச் சமானமாயிருப்பார்; தேக காந்தியிலும் சிவப்புக்கு நேர் விரோதமான வர்ணமுடையவர். இவரை வெளியிற் பார்ப்பவர்கள், இவராவது மேடையின் பேரில் ஏறுவதாவது என்று சாதாரணமாய் நினைப்பார்கள். அவ்வண்ணமிருந்தும், இவர் ஜீமுதவாஹனனாக நடித்துப் பெயர் பெற்றதற்குக் காரணம், இவரை இப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்ததும், அதை நன்றாய் நடிக்க வேண்டுமென்று இவருக்கிருந்த உற்சாகமுமேயாம். எனது அபிப்பிராயம், எந்த மனிதனும் நாடக மேடையில் ஏதாவது ஒரு பாத்திரத்தை நன்றாய் நடிக்கக்கூடும்; ஆனால் அதைக் கண்டெடுத்து அம் மனிதனுக்குக் கொடுப்பதுதான் கடினம். டாக்டர் சீதாராமய்யர் இந் நாடகத்தில் சூர சேனனாக நடித்தது சுமாராக இருந்தது, அ. பஞ்சநாத ஐயா பி.ஏ., பி.எல்., ஜெயதேவனாக நடித்தார்; இவர் நன்றாய்ப் பாடி நடித்தபோதிலும் இவருக்கு அப் பாத்திரம் பொருத்தமானதன்று என்பது என் அபிப்பிராயம். மற்றப் பாத்திரங்களைப்பற்றி நான் இங்கு எழுதக் கூடியது எனக்கொன்றும் ஞாபகமில்லை.

இந் நாடகம் நான் எழுதியவற்றுள் பெரிய நாடகமாகையால், இது முடிவு பெற ஏறக்குறைய மூன்று மணியாயிற்று. பிறகு எங்கள் வேஷங்கள் களைந்துவிட்டு ஆக்டர்களெல்லாம் சந்தோஷமாய் மேடையின்மீது உட்கார்ந்துகொண்டு நான்கு மணி வரையில் பேசிக் கொண்டிருந்தோம்.