பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

694

நாடக மேடை நினைவுகள்


சென்னையில் இருந்த பொழுது தெரியும்; இவரது தந்தை யாகிய சௌந்தரராஜ ஐயர் எனது நெருங்கிய நண்பர்; ஆகவே இவரைப் பார்த்து “ஏனையா, எனக்குத்தான் சுகுண விலாச சபையில் கோமுட்டி என்று பெயர்; இந்த சபைக்கு நீங்கள் ஒரு கோமுட்டியாயிருக்கிறாற் போல் இருக்கிறதே!” என்று நகைத்துக்கொண்டு சொன்னேன். இச்சபையின் காரியங்களைத் தன் சொந்தக் காரியம்போல் அத்தனைப் பரிவுடன் இவர் பார்த்து வருகிறார் என்பது இச்சபையின் அங்கத்தினரெல்லாம் அறிந்த விஷயமே. இதன் பொருட்டு இவருக்கு “தம்முடு” (தம்பி) என்றே பெயர் வைத்தேன். இது கோமுட்டிகள் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு பதம்; இச்சபையின் வரவை அதிகப்படுத்துவதிலும், செலவைக் குறைப்பதிலும் இவர் அசல் கோமுட்டியே; இவ்வாறு எழுதுவதற்காக இவர் என்மீது கோபங் கொள்ளமாட்டார் என்று உறுதியாய் நம்பியே இதை இங்கு எழுதலானேன்.

இச் சபையானது, எனது மதுரை நண்பர்கள் எனக்குத் தெரிவித்தபடி 1925ஆம் வருடம் ஸ்தாபிக்கப்பட்டதாம். ஆரம்பித்த இரண்டொரு வருடத்திற்குள் ஆக்டர்களுக்குள் ஏதோ காரணத்தினால் கலகம் பிறந்து, சில முக்கிய ஆக்டர்கள் இதை விட்டு விலகினராம்; அதன் பேரில் இச்சபையில் மிகுந்த ஊக்கமுள்ள, மேற்சொன்ன வைத்திய நாத ஐயர், டி.வி.எஸ். தாதாச்சாரியார், கிருஷ்ணசாமி சாஸ்திரிகள் முதலியோர், சென்னையிலிருந்து இங்கு வந்து சேர்ந்த, எங்கள் சபை மெம்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலுவின் உதவியை நாடி, எம். சுப்பிரமணிய ஐயர், பஞ்சநாத ஐயர், டாக்டர் சீதாராமய்யர், சோமநாதய்யர் முதலிய புதிய ஆக்டர்களைச் சேர்த்து, சபை அழியாதபடி ஸ்தாபித்தனராம். 1927ஆம் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை மதுரைக்குப் போனபோது, இச் சபையார் எங்கள் சபைக்கு விருந்தளித்ததைப்பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன்; அச்சமயம், இச் சபையில் நான் ஒரு ஆக்டு செய்வேன் என்று கனவிலும் நினைத்தவனல்ல; அப்படிச் செய்வேன் என்று யாராவது சொல்லியிருந்தால், அது முடியாத காரியம் என்று பந்தயம் போட்டிருப்பேன். பின்னால் நடக்கப் போகிறதைப் பற்றி, முன்னால் பேதை மாந்தரால் என்ன உறுதியாய்க் கூற முடியும்?