பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நாடக மேடை நினைவுகள்


அரங்கத்தில் நடித்த சுப்பிரமணிய ஐயருடைய முக ஜாடையும் ஒன்றாய் இருந்தது! அச்சமயம் சுப்பிரமணியருடன் நான் நடிக்கின்றேனோ என க்ஷண நேரம் பிரமித்தேன்! காலம் ஓடுகின்றது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி எனக்கு வேண்டியதில்லை.

இனி அந்தப் பகிரங்க ஒத்திகையைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் கூறுகிறேன்.

ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று டிக்கட்டுகளில் விளம்பரம் செய்திருந்தோம். எட்டுமணிக்கெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்து விட்டனர். அதற்குள்ளாக என் வேஷத்தை நான் பூண்டு, ஏதோ சில்லரை விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எங்கள் சபை காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார், நாங்கள் வேஷம் தரித்துக் கொண்டிருந்த அறைக்குள் பெருமூச்சு வாங்க ஓடி வந்து ஒரு நாற்காலியில் விழுந்தார். நான் என்னவென்று கலவரத்துடன் கேட்க அவர், “நான் தப்பு செய்துவிட்டேன். சம்பந்தம்! என்னை மன்னித்துவிடு! யாரோ ஒருவர், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்தார். அவர் கையில் டிக்கட் இல்லை. டிக்கட்டில்லாமல் ஒருவரையும் உள்ளே விடமாட்டேன் என்று உறுதியாய்க் கூறினேன். அதன்மேல், அவர் என் டிக்கட், என் பிள்ளையிடம் இருக்கிறதெனச் சொன்னார். நான், நீங்கள் யாரென்று கேட்க தன் பெயரைச் சொன்னார். அப்பொழுதுதான் அவர் உன் தகப்பனார் என்று தெரிந்தது. சம்பந்தம்! நான் என்ன செய்வது! ‘என்று வாய்குளறச் சொன்னார். அதன் மீது நான் அவர் செய்தது தவறல்லவென்றும் அதுதான் நியாயமென்றும் சொல்லித் தேற்றி, என் சாவியைக் கொடுத்து என் ஜேபியிலிருந்த டிக்கட்டைக் கொண்டு வரும்படி சொல்ல, “வேண்டாம்! வேண்டாம்! அவர் இன்னாரென்று தெரிந்தவுடன், உள்ளே டிக்கட்டு இல்லாமலே விட்டு விட்டேன்” என்று பதில் உரைத்தார். அப்படிச் செய்ததுதான் தவறு என்று அவரைக் கடிந்து கொண்டேன்.

பிறகு, எட்டரை மணியாகியும் கதாநாயகன் வேஷம் தரிக்க வேண்டிய ரங்கசாமி ஐயங்கார் வந்து சேரவில்லை! நாடகம் ஆரம்பிக்க இன்னும் அரை மணிதான் இருக்கிறதே