பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

695


இவ்வாறு நான் வேறொரு சபையில் நடித்து பிறகு மெம்பராகச் சேர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், மதுரைக்கு உத்யோக வழியில் மாற்றப்பட்டதென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அவர் மதுரைக்குப் போயிராவிட்டால், இந்தச் சபையில் நடிப்பதைப்பற்றிக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். நாகரத்தினம் ஐயர் ஒரு நாள் மதுரைக்குத் தன்னை மாற்றி விட்டார்கள் என்று எனக்குத் தெரிவித்த பொழுது, எனது அத்யந்த நண்பராகிய அவரை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று நான் வருத்தப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆயினும் அப்படி அவரை மதுரைக்கு மாற்றியிராவிட்டால், நான் பன்முறை மதுரைக்குப் போய் நாடகமாடவும், அங்குப் பல புதிய நண்பர்களைப் பெறவும் இல்லாமற் போயிருக்குமல்லவா? ஆகவே ஜகதீசன் நமக்கு ஏதாவது துக்கத்தை அனுப்பினால், அதுவும் ஏதோ நமது நன்மைக்காக இருக்கலாம் என்று நமது மனத்தை தைரியம் செய்துகொண்டு பொறுப்பதே நலம். எனது முதிர் வயதில் நான் கண்ட இவ்வுண்மையை எனது இளைய நண்பர்கள் முன்னமே அறிந்து எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்வார்களாக!

இம் மதுரை சபையார், சற்றேறக்குறைய, சுகுண விலாச சபையின் கோட்பாடுகளையே பற்றி நடந்து வருகின்றனர்; சுகுண விலாச சபையின் முக்கியக் கருத்துகளில் ஒன்று, திராவிட நாடகங்களை அபிவிருத்தி செய்வதாம்; ஆகவே இத்தகைய சபைகளின் மூலமாகவும் அதை அபிவித்தி செய்வது நமது கடமையாகும் என்று என் மனத்தைத் திருப்தி செய்து கொண்டேன்.

இரண்டாவது நாடகம் இங்கு முடிந்த பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் “படியளந்த” உற்சவம் என்பதைப் பார்க்க விருப்பமுள்ளவனாய், இரண்டு மூன்று தினங்கள் இவ்விடம் தாமதிக்க வேண்டி வந்தது; இந்த இரண்டு மூன்று தினங்களும், எனது புதிய நண்பர்கள் வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கே எனக்குச் சரியாயிருந்தது. இடையில் ஒரு தினம், எனது நண்பர்களுடன் கள்ளழகர் எனும் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குப் போயிருந்தேன். அச் சமயம் அதன் தர்மகர்த்தர் என்னை மிகவும்