பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

696

நாடக மேடை நினைவுகள்


உபசரணையுடன் வரவேற்று, கோயிலிலுள்ள விசேஷங்களையெல்லாம் காண்பித்து, ஸ்வாமி தரிசனம் செய்வித்தார். இவர் மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினருள் ஒருவர்; இவ்வாறு இவர் எனது சௌகர்யங்களை யெல்லாம் கவனித்து, ஸ்வாமி தரிசனம் செய்து வைத்ததும், இன்னும் இதைப் போன்ற பல ஸ்தலங்களில் எனது நண்பர்கள் எனக்குதவியதும், நான் ஏதோ தமிழ் நாடக மேடைக்காக உழைத்ததன் பலனே என்று நான் உறுதியாய் நம்புகிறேன். பிறகு, பிரிய மனமில்லாதவனாய் எனது புதிய நண்பர்களை விட்டுப் பிரிந்து சென்னை வந்து சேர்ந்தேன். வந்தவுடன் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், “தாசிப் பெண், வள்ளி” என்னும் இரண்டு நாடகங்களில், நானும் நாகரத்தினம் ஐயரும் நடித்தோம்.

31 ஆவது அத்தியாயம்

1930ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில் நான் புதியதாய் எழுதி அச்சிட்ட “கொடையாளி கர்ணன்” எனும் நாடகத்தை ஒத்திகை செய்து, மார்ச் மாதத்தில் இரண்டு முறை அதை ஆடினோம். இந் நாடகமானது, பல வருடங்களுக்குமுன், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் இனி நாடக மேடையின்மீது வேறொருவருடனும் நான் நடிப்பதில்லை என்று தீர்மானித்தபடியால், இந் நாடகத்தையும், “சகதேவன் சூழ்ச்சி” என்னும் நாடகத்தையும் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது ஆரம்பித்தபோதிலும், நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த காலத்தில் அவைகளைப் பூர்த்தி செய்ய அவகாசமில்லாமற் போயிற்று; 1928ஆம் வருடம் நான் அவ் வேலையை விட்டு நீங்கின பிறகு, அவைகளிரண்டையும் பூர்த்தி செய்து, அவ் வருடத்தின் கடைசியில் அச்சிட்டேன்.

நான் சிறு வயதில் மகாபாரதத்தைப் படித்தது முதல், பரம தயாளுவான கர்ணனுடைய நற்குணங்கள் என்