பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

699


படியால், ஸ்திரீ ஆக்டர்கள் அதிகமாயுடைத்தாயிராத சபைகளில் இதை எளிதில் ஆடலாம்.

இக் கர்ணனது நாடகத்தை எழுதி முடித்தவுடன், “சகதேவன் சூழ்ச்சி” என்கிற ஒரு சிறு நாடகத்தையும் எழுதினேன். இந் நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், இதில் ஸ்திரீ பாத்திரமே கிடையாது! பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் மாணவர்கள் இதை எளிதில் ஆடலாம் என்பது என் கருத்து. மஹாபாரதத்தில் சகதேவன், பீமன், அர்ஜுனன் முதலிய பாத்திரங்களுக்கு முன்பாக அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை ; ஆயினும் அவன் சிறந்த புத்திசாலி, மிகவும் பக்திமான் என்கிறதை விளக்க, அவன் தன் சூழ்ச்சியினால், ஸ்ரீகிருஷ்ணபகவானுடைய சூதை யறிந்து, அவரைத் தன் பக்தி வலையால் பிணைத்து, அவரிடமிருந்து தங்கள் ஐவரை மாத்திரம் பாரத யுத்தத்தில் எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று வரம் பெறுகிறான். இதையே இந் நாடகக் கதையாக வைத்து எழுதி உள்ளேன்.

இவ்வருஷம் ஜூலை மாதம் 19ஆம் தேதி எங்கள் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை மறுமுறை ஆடினார்கள். இதற்கு முக்கியக் காரணம் முதன் முறை இது எங்கள் சபையோரால் ஆடப்பட்டபோது, நானும் நாகரத்தின ஐயரும் மதுரையிலிருந்தபடியால், நாங்கள் முக்கியப் பாத்திரங்களை எடுத்துக் கொள்ள ஏலாமற் போனதே; எங்கள் சபையார் நாங்களிருவரும் இந் நாடகத்தில் அர்ஜுனனாகவும் சுபத்திரையாகவும் நடிப்பதைக் காண வேண்டுமென்று இந் நாடகத்தை மறுபடியும் வைத்துக் கொண்டார்கள். நாங்கள் ஆடியபோது முதன் முறை யாதோ காரணத்தினால் ஆடாமல் விட்டுப் போன கடைசிக் காட்சிகள் இரண்டு மூன்றையும் சேர்த்து நாங்கள் இம்முறை ஆடினோம்.

மேற்சொன்ன நாடகங்களன்றி இவ்வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகமானது, எங்கள் சபையின் தொள்ளாயிரத்து நாடகமாக ஆடப்பட்டது. இந்நாடகமானது இதற்கு முன் எங்கள் சபையோரால் 32 வருடங்களுக்கு முன்தான் ஆடப்பட்டது.