பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

701


மெச்சப்பட்டது. அன்றியும் சாரங்கனை ஸ்ரீதத்தன் அடித்துத் தள்ளும் காட்சியில், என் கையில் வைத்திருந்த யோக தண்டத்தினால், வாஸ்தவத்தில் நன்றாய்ப் புடைத்து விட்டேன், அவரது உடம்பில் தழும்பேறும்படியாக! இதைப் பற்றிப் பேச்சு வரும் போதெல்லாம் சுப்பிரமணிய ஐயர், என்னை ஏளனம் செய்வதை இன்னும் விட்டிலர்.

நானும் நாகரத்தின ஐயரும் அடிக்கடி வந்து நாடகமாடுவதென்றால் நன்றாயிராது; நீங்களாக ஏதாவது நாடகங்களை ஆடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில், மதுரை டிராமாடிக் கிளப்பார் எனது “சுபத்தி ரார்ஜுனா” நாடகத்தை எடுத்துக் கொண்டனர். ஆயினும் நான் அதில் ஆடாவிட்டாலும், ஆக்டர்களுக்கு ஒத்திகை செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதற்கிசைந்து நான் மதுரைக்கு “மது விலக்குப் பிரசார” சம்பந்தமாகப் போக வேண்டிய சமயத்தில், அந்த நாடகத்தை வைத்துக் கொள்ளச் செய்து, அந்தச் சமயத்தில் இந் நாடகத்தில் ஒத்திகைகளை நடத்தி, அருகிலிருந்து இந் நாடகத்தை அவர்களைக் கொண்டு நடிக்கச் செய்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர்ந்திருப்பதை முன்பே தெரிவித் துள்ளேன். 1929ஆம் வருஷம் கவர்ன்மென்ட் மந்திரிகளில் ஒருவராயிருந்த எனது நண்பர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள், துரைத்தனத்தாரும் மது விலக்குப் பிரசாரம் நடத்த வேண்டுமென்று சட்ட சபையில் அங்கத்தினரை ஆமோதிக்கச்செய்து, அதற்காகக் கொஞ்சம் ரூபாயைப் பிரத்யேகமாக எடுத்து வைத்து, சென்னை ராஜதானியில் ஒவ்வொரு ஜில்லாவிலும் மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டிகளை ஏற்படுத்தி, இக் கமிட்டிகளுக்கெல்லாம் மேல் பார்வையாக சென்னையில் ஒரு சென்டிரல் (Central) கமிட்டி ஏற்படுத்தி, அதன் கிளையாக பப்ளிசிடி (Publicity) கமிட்டி என்று ஒன்றை ஏற்படுத்தினார். அப்பப்ளிசிடி கமிடிக்கு என்னை அக்கிராசனாதிபதியாக ஏற்படுத்தினார். இது விஷயமாக நான் சில ஜில்லாக்களைப் பார்த்து வர வேண்டி வந்தது. இக் காரியமாக இவ்வருஷம் ஜூன் மாசம் கும்பகோணத்திற்கும் மதுரைக்கும் போக வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் மதுரையில் “சுபத்திரார்ஜுனா"