பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702

நாடக மேடை நினைவுகள்


நாடகத்தை நடத்தினேன். மேற்கண்ட மது விலக்குப் பிரசார விஷயத்தைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. அதாவது இந்த மது விலக்குப் பிரசார கமிட்டியாரின் தூண்டுதலினால் நான் இவ்வருஷம் (1930) “உண்மையான சகோதரன்” என்ற நாடகத்தை எழுதி முடித்தேன். மது விலக்கு விஷயமாக எங்கள் கமிட்டியார் பல விஷயங்களை யோசித்து வந்த பொழுது, அதிலிருந்த எனது நண்பர்களில் அநேகர், “மதுவினால் உண்டாகும் தீமைகளைப் பற்றி நீங்கள் ஒரு நாடகம் எழுதி, அதை ஜில்லாக்கள் தோறும் ஆடி வைத்தால், நாம் எடுத்துக் கொண்ட காரியத்திற்கு மிகவும் அனுகுணமாயிருக்கும்” என்று வற்புறுத்தினர். அதன் பேரில் “உண்மையான சகோதரன்” என்னும் நாடகத்தின் கதையை யோசித்து, அதன் சாராம்சத்தை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் மிகவும் குதூஹலத்துடன் அதை எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் நாடகமாய் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். அதன் பேரில் இவ் வருஷம் நான் பெங்களூருக்குப் போயிருந்தபொழுது, பெரும்பாலும் அதை எழுதி முடித்தேன். உடனே அச்சிட்டு, எங்கள் கமிட்டியார் அனுமதியின்மீது ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றிற்கும் சில புஸ்தகங்களை அனுப்பினேன். அதன்பேரில் இவ்வருஷத்திற்குள்ளாக பத்துப் பன்னிரண்டு முறை ஜில்லாப் பிரசார கமிட்டிகளால் இந்நாடகம் ஆடப்பட்டது. நான் எழுதிய நாடகங்களில், சுகுண விலாச சபையார் ஆடு முன்பாக மற்றவர்கள் ஆடிய நாடகம் இது ஒன்றாகும். சாதாரணமாக ஏதாவது நாடகமொன்றை நான் எழுதினால், அதை எங்கள் சபையில் நடித்து, ஏதாவது சீர்திருத்த வேண்டியிருந்தால் அப்படிச் செய்த பிறகே, மற்றச் சபைகளுக்கு அதை ஆட நான் உத்தரவு கொடுப்பது வழக்கம். இவ்வழக்கத்தினின்றும் இந்நாடகத்தில் நான் மாற வேண்டி வந்தது. நான் எழுதிய நாடகங்களுள், தின வர்த்தமானப் பத்திரிகைகளால் மிகவும் கொண்டாடப்பட்ட நாடகங்களில் இது ஒன்றாகும். இந்த நாடகம் எழுதும் போது எனக்கு ஒரு வேடிக்கையான கஷ்டம் நேர்ந்தது. கதையை எழுதுவதில் கஷ்டப்பட வில்லை அதிகமாக; கதாநாயகனுக்குப் பெயர் கொடுப்பதில் தான் அதிகக் கஷ்டப்பட்டேன்! இதுவோ, தற்காலத்திய