பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704

நாடக மேடை நினைவுகள்


நன்றாய்த்தானிருக்கிறது பிரதர் (Brother) ஒன்று மாத்திரம்தான் எனக்குப் பிடிக்கவில்லை! இந் நாடகத்தின் ஹூரோவை நாயுடுவாக எழுதியதை மாற்றி வேறு ஜாதியானாக எழுதக் கூடாதா?” என்று ரகசியமாகக் கேட்டார். அதற்கு நான் “அப்படிச் செய்வதற்கு ஆட்சேபணை இல்லை; ஆனால் ஒரு கஷ்டம்தானிருக்கிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுவீரானால, உடனே மாற்றி விடுகிறேன்; நாயுடு என்பதை மாற்றி ஐயராக்கினால், ஐயர்கள் கோபித்துக் கொள்வார்கள்; ஐயங்கார் ஆக்கினால், அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் முதலியாராக்கினால், எங்களவர்கள் கோபித்துக் கொள்வார்கள்; பிள்ளையாக்கினால், பிள்ளைமார் கோபித்துக் கொள்வார்கள்; எந்த ஜாதியானாக எழுதிய போதிலும், அச் சாதியார் உங்கள் நியாயப்பிரகாரம் மன வருத்தமடைவார்கள்! ஆகவே இதற்கு ஒரு வழி நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதன்மீது இந்த ஆட்சேபணைக்குத் தக்க பதிலுரைக்க வகையில்லாதவராய், அவர் வேறு வழியில்லை என்று ஒப்புக்கொண்டனர். இதை நான் அந்நாடகத்தின் முகவுரையில், என்மீது எச் சாதியாரும் கோபியாதபடி எழுதியுள்ளேன். இந்த ஜாதிபேதக் கலகமானது நமது நாட்டை விட்டு எப்பொழுது அகலுமோ அறியேன். நாடகமெழுதுவதிலும் இக் கலகம் பிறந்தால், பிறகு எதில்தான் இது நுழையாது? இந்த விஷம் நமது தேசத்தைவிட்டு எப்பொழுது போகுமோ, அப்பொழுது தான் நமது தேசம் ஐக்கியப்பட்டு, நாம் முன்னுக்கு வருவோம். அப்பொழுதுதான் நமக்குச் சுயராஜ்யம் கிடைத்தாலும் நிலைக்கும் என்பது என் துணிபு; இதை விஸ்தரித்து “பிராம்மணனும் சூத்திரனும்” என்கிற பெயரையுடைய ஒரு நூதன நாடகத்தைச் சென்ற இரண்டு வருடகாலமாக எழுதி வருகிறேன். அது இன்னும் பூர்த்தியாக வில்லை. இறைவன் இன்னருளால் அதைச் சீக்கிரம் பூர்த்தி செய்து அச்சிடலாமென்றிருக்கிறேன். அந்நாடகம் அச்சிட்டு வெளியானவுடன், இருதிறத்தாரும் என்னை வைவார்கள் என்பது திண்ணம். ஆயினும், ஒரு நூலாசிரியன், எவ்வளவு அற்பனாயிருந்தபோதிலும் பட்சபாதமன்றி, ஒருவருக்கும் பயப்படாது எழுத வேண்டியது அவன் கடமை எனக் கருதியவனாய், இருதிறத்தாரிடமுள்ள குற்றங்களை அஞ்சாது எடுத்துக் காட்டி, அவர்கள் ஐக்கியப்பட்டாலொழிய