பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

57


என்று நாங்ககளெல்லோரும் கலவரப்பட்டுக் கொண்டிருந்தோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கஷ்டத்தினின்றும் கரையேற அன்று முதல் இன்றுவரை, எனக்கு ஒரு மார்க்கம்தான் தெரியும். அதாவது மௌனமாய் தெய்வத்தைக் குறித்துப் பிரார்த்திப்பதே; ஒரு மூலைக்குச் சென்று ஒருவருமறியாதபடி, நான் அவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இடையிலேயே, ரங்கசாமி ஐயங்கார் வந்து விட்டார் என்கிற கூச்சல் கிளம்பியது. உலகத்தில் தெய்வம் ஒன்று உண்டென்றும் அதற்குப் பிரார்த்தனை செய்வதனால், தமது மனோபீஷ்டம் தவறாக இல்லாவிட்டால் நிறைவேறு மென்றும் மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நான் நம்புகிறேன். இதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு இங்கிலாண்டு தேசத்திய மஹாகவி டெனிசன் (Tennyson) என்பவர் “கடவுளை வணங்குவதில், கனவிலுங் கைகூடாவென எண்ணும் அநேக விஷயங்கள் கைகூடுகின்றன” என்று எழுதியிருப்பதைக் கவனப்படுத்துகிறேன்.

அதன்மேல், அவரை ஏன் இவ்வளவு நேரம் சென்று வந்தாய் என்று நான் கடிந்து கொள்ள, தன் தகப்பனாரைத் தூங்கப்படுத்தி விட்டு வரவேண்டியதாயிற்று என்று பதில் உரைத்தார்! பிறகு அவசரமாய் அவருக்கு வேஷமெல்லாம் போட்டு, சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் நாடகத்தை ஆரம்பித்துவிட்டோம். அன்று முதல் இருபத்தைந்து வருஷம் பேரிலில்லா விட்டாலும் வாஸ்தவமாக, சுகுண விலாச சபையின் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் கண்டக்டராக இருந்து நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தி வந்தேன்; அவைகளிலெல்லாம், ஒன்றிலாவது குறித்த மணி தவறி ஆரம்பித்ததாக ஞாபகமில்லை . இது, பாதி ஈசன் அருளினால் என்றும், பாதி எனது நண்பர்கள் என்னிடங்கொண்ட அன்பினால் என்றும் உறுதியாய் நம்புகிறேன்.

நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரையில் நடத்தினோம். ஐந்து மணி நேரம் ஆகியும், எங்களுக்குக் கஷ்டமாகத் தோன்றவில்லை! வந்தவர்களும் ஒருவரும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்திருக்கவில்லை. மொத்தத்தில் நாடகம் நன்றாகவே நடிக்கப்பட்டதென்று நான் நினைக்கிறேன். நாடகம் நடிக்கும் பொழுது என் தகப்பனார் அரங்கத்தின் எதிரில் உட்கார்ந்திருக்கிறார் என நான் அறிந்தும்,