பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

706

நாடக மேடை நினைவுகள்


சபையோர் இக் காட்சியின் முடிவில், ஆடிப் பாடிய அப்சரஸ் ஸ்திரீகளுக்கு ஒரு மடங்கு கர கோஷம் என்றால், “சும்மா இருக்கும் சன்யாசிக்கு இரட்டைப் படி” என்பது போல், சும்மா இருந்த அர்ஜுன சன்யாசிக்கு, இரு மடங்கு கர கோஷம் அளித்தனர். இந்நாடகத்தின் இடைக் காட்சிகளில், எனது மதுரை நண்பர்கள் பஞ்சநாத ஐயரும் டாக்டர் சீதாராம அய்யரும் மிகவும் விமரிசையாக நடித்தனர் என்பது எனது அபிப்பிராயம் மாத்திரம் அன்று, சபையோருடைய அபிப்பிராயமும் அப்படியே.

இங்கு நடத்திய “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில், சுப்பிரமணியராக வந்த நான், அதிகமாகப் பாடாத குறையினை, வள்ளியாக வந்த எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர்; தான் வேண்டிய மட்டும் பாடி, சபையோரை மறக்கச் செய்துவிட்டார். இந் நாடகத்தில் வள்ளியாக அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென, அன்று இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த இதர சபை அங்கத்தினர் உட்பட எல்லலோரும் ஒப்புக்கொண்டனர்.

இந் நாடகத்தின் இடைக் காட்சியொன்றில், எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர், மதுரையில் சுண்டல் விற்கும் ஒருவனைப்போல், அச்சம் அப்படியே வேஷம் தரித்து வந்ததை இப்பொழுதும் நினைத்துக் கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இந்த வேடத்திற்கு அசலாகிய அச் சுண்டல் விற்பவனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை ; பிறகு ஒரு சமயம் நான் மதுரைக்குப் போனபோது அகஸ்மாத்தாய் வடக்குச் சித்திரை வீதியில் அவனைக் கண்டபொழுது, ஆச்சரியத்துடன் திடுக்கிட்டு இரண்டு நிமிஷம் அவன் அருகில் நின்று கவனித்தேன். அப்பொழுதுதான் எனது நண்பர் அவனைப் போல் வேஷம் தரித்ததைக் கண்டு, சபையோர் கரகோஷம் செய்ததன் அர்த்தத்தைக் கண்டேன்! எனது பழைய நண்பர் காலஞ்சென்ற வேதம் வெங்கடாசல ஐயருக்குப் பிறகு, மதுரை நண்பர் சுப்பிரமணியரைப்போல், எந்த வேடம் தரித்தாலும் அதற்குத் தக்கபடி சிரமம் எடுத்துக் கொள்பவரைக் கண்டேனில்லை, நான்.