பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710

நாடக மேடை நினைவுகள்


இணையில்லையென்பது என் தீர்மானமான அபிப்பிராயம். மதுபானப் பிரியராகிய பலராமர் பாத்திரமானது, மிகவும் ஒழுங்காய் எனது நண்பர் மா. சுப்பிரமணிய அய்யரால் நடிக்கப்பட்டது. எனது நண்பர் டாக்டர் நாராயண ஐயர் மேற்கொண்ட “லம்போதரன்” பாகம் சிறிதாயினும், அதை மிகவும் நன்றாய் நடித்து சபையோரைக் களிக்கச் செய்தார்; ஆயினும் லம்போதரன் என்னும் பெயருக்கிசைய இவருக்கு தொப்பை மாத்திரம் இல்லாமற் போச்சுது! மதுரையில் இம்முறை நடத்திய இரண்டு நாடகங்களும், இதற்கு முன் இரண்டு முறை நடத்திய நாடகங்களும் மதுரை மாசி வீதி நாடகக் கொட்டகையில் நடத்தப்பட்டன. இவ் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை, முதல் ஐந்தாறு மாதம் கொஞ்சம் நித்திரை போயிற்றென்றே சொல்ல வேண்டும். கடைசியில்தான் கொஞ்சம் விழித்துக் கொண்டது. டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நான் தமிழில் எழுதிய “சகுந்தலை” நாடகமானது ஆடப்பட்டது. இந் நாடகமானது 1929ஆம் வருடத்தில் என்னால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. இதைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில சமாச்சாரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனது நாடக மேடை நினைவுகளை ஆதி முதல் வாசித்துகொண்டு வரும் நண்பர்கள், நான் 1891ஆம் வருஷம் இந் நாடகத்தை, மானியர் வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் காளிதாசரியற்றிய சம்ஸ்கிருத நாடகத்தை ஆங்கிலத்தில் மொழியெர்த்ததை, தமிழில் மொழி பெயர்க்க யத்தனித்தேன் என்பதைக் - கவனித்திருக்க கூடும். அச்சமயம் முதல் நான்கு அங்கங்களை மொழி பெயர்த்ததாக எனக்கு ஞாபகம்; ஏதோ சில காரணங்களால் அதைப் பூர்த்தி செய்யாது விட்டேன். அச் சமயம் சம்ஸ்கிருதத்தில் எனக்கு ஒரு எழுத்தும் தெரியாது. பிறகு நான் வக்கீலான பின், சுமார் 1904ஆம் வருடம், ஹிந்து சியலாஜிகல் ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத உபாத்தியாயராயிருந்த காலஞ் சென்ற அப்பாசாமி சாஸ்திரியாரை எனது சம்ஸ்கிருத உபாத்தியாயராக ஏற்படுத்தி, காலையில் தினம் கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருத பாஷையைக் கற்க ஆரம்பித்தேன்.