பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

711


என் வீட்டிலிருந்த சிறு குழந்தைகள் நகைக்கும்படி, சம்ஸ்கிருத எழுத்துகளை, பலகையில் எழுதிக் கற்க ஆரம்பித்தேன்! என் சம்ஸ்கிருத வாத்தியார், எனக்கு முதல் நாள் சொன்ன ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் தாத்பர்யம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. அதாவது, காரியசாதன விஷயத்தில் மனிதர்கள் மூவகைப்படுவார்கள் அதமர்கள், ஒரு காரியத்தை ஆரம்பித்தவுடன், அதன் கஷ்டங்களைக் கண்டு பயந்தவர்களாய், முதலிலேயே கைவிடுவார்கள்; மத்திமர்கள், கொஞ்சதூரம் பிரயத்தனப் பட்டு, பிறகு அதை முடிக்க அசக்தர்களாய்க் கைவிடுவார்கள்; எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்டபோதிலும், அவைகளை ஒரு பொருட்டாகப் பாராட்டாமல், அவைகளை வென்று அக் காரியம் சித்திபெறும் வரையில், கைவிடாது நிர்வகிப்பவனே உத்தம புருஷனாவான் என்பதே. இதையே என் குருவின் போதனையாக் கொண்டு, பதினெட்டு வருடம், தினம் கொஞ்சம் கொஞ்சமாக, கஷ்டமான சம்ஸ்கிருத பாஷையைக் கற்றேன். பால பாடங்கள் ஒன்றிரண்டான பின், ஸ்ரீமத் ராமாயணத்தை எடுத்துக் கொண்டு முற்றிலும் படித்தேன்; அன்றியும் அதிலும் பெரிய கிரந்தமான வியாசபாரதத்தையும் இரண்டு பர்வங்கள் தவிர மற்றெல்லாவற்றையும் படித்தேன். பழைய காலத்து சாஸ்திரியாராகிய என் சம்ஸ்கிருத உபாத்தியாயர், ஆதியோடந்தமாக அக்கிரந்தத்தைப் படிக்கலாகாது என்னும் கொள்கை கொண்டிருந்தவர். அன்றியும் ஹிதோபதேசம், ரகுவம்சம், பர்த்ருஹரி சதகங்கள் முதலிய கிரந்தங்களையும் அவரிடம் படித்தேன்; நான் நாடகங்கள் எழுதுவதற்கு உபயோகமாகும்படி சகுந்தலை, நிக்ரமோவசி, மாளவிகாக்னி மித்ரம், வேணி சம்ஹாரம், மிருச்சகடிகம், உத்தரராம சரித்திரம், பிரபோத சந்திரோதயம், சங்கல்ப சூர்யோதயம் முதலிய நாடகங்களையும் அவரிடம் கற்றேன். மேகசந்தேசம், கிராடார்ஜுனியம் முதலிய காவியங்களையும் வாசித்தேன். அவராகத் தனக்கு வயது முதிர்ந்தபடியால் இனி உங்கள் வீட்டிற்கு வந்து பாடம் சொல்ல முடியாது என்று சொல்லுகிற வரையில் நான் அவரைக் கைவிடவில்லை ; அவர் காலகதியான பிறகும், தினம் கால்மணி சாவகாசமாவது ஏதாவது காலையில் சம்ஸ்கிருதம் படித்து வருகிறேன்