பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

716

நாடக மேடை நினைவுகள்


வைத்துக் கொண்டார்; அதில் நான் ஒரு சிறு பாகமாகிய காஸ்கா (Casca) என்பதை நடித்தேன். என்னை இந் நாடகத்தில் இதனிலும் பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபோதிலும் அப்படிச் செய்ய அசக்தனாயிருந்தேன். இதற்கு முக்கியக் காரணம், தற்காலம் எனக்கு வயது அதிகமாய் விட்டபடியால் புதிய பாகங்களைக் குருட்டுப் பாடம் செய்வது மிகவும் கஷ்டமா யிருக்கிறது; தமிழிலாவது அப்படிச் செய்வது அதிக கஷ்ட மாயில்லை; மற்றப் பாஷைகளில் அப்படிச் செய்வது மிகவும் சிரமமாயிருக்கிறது. நான் இதற்கு முன்பாக எங்கள் சபையில் ஆங்கிலத்தில் பாத்திரங்களைத்தான் நடித்திருக்கிறேன். அவற்றுள் நான் கொஞ்சம் பெயர் பெற்றது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் “ஒதெல்லோ” என்னும் நாடகத்தில் ஈயாகோ (lago) என்னும் பாத்திரத்தில்; நான் இப் பாத்திரத்தை இரண்டு மூன்று முறை நடித்திருக்கிறேன். ஒரு முறை நடித்தபொழுது, உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து வந்த (Globe trotter) ஓர் ஆங்கிலச் சீமான், அச் சமயம் அகஸ்மாத்தாய் சென்னைக்கு வந்திருந்தவர், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நானிதை நடித்ததைப் பார்த்து, “இந்த ஆக்டர் இங்கிலாந்தில் இருப்பானாயின் நல்ல பணம் சம்பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்ததாக எனது நண்பர்கள் எனக்குக் கூறினர். சீமைக்குப் போக வேண்டுமென்று மாத்திரம் எனக்கு அநேக வருஷங்களாக ஆவல் உண்டு. ஆயினும் அங்கு போய் நடித்துப் பெயர் பெற வேண்டு மென்றல்ல (அது அசாத்தியம் என்பது நிச்சயம்); அங்கு போய்ச் சிறந்த ஆக்டர்கள் நடிப்பதைக் கண்டு, இக்கலையில் இன்னும் தேர்ச்சியடைய வேண்டுமென்றே. இதை வாசிக்கும் என் இளைய நண்பர்கள் என்னைப் பார்த்து நகைகக்கூடும். அப்படிச் செய்பவர்களுக்கு அடியில் வரும் கதையைத் தெரிவிக்க விரும்புகிறேன். இத்தாலி (Italy) தேசத்தில், மைகெல் ஆங்கிலோ (Michael Angelo) என்னும் உலகம் புகழ்கிற சில்ப சாஸ்திரி ஒருவர் இருந்தார்; அவர் தனது எண்பத்தோராம் வயதில், (அதற்கு மேற்பட்ட வயதிலோ எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) ஒரு நாள் ரோம் (Rome) நகரத்திலுள்ள பழைய கட்டடமான கொலிசியம் (Coliseium) என்பதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட வாலிபன் ஒருவன், “ஓய்! கிழவனாரே! இங்கு