பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/732

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

717


என்ன செய்கிறீர்?” என்று வினவ, அதற்கு அவர், “அப்பா, நான் சிற்ப சாஸ்திரம் கற்கிறேன்” என்று விடை பகர்ந்தனராம். நான் இன்னும் அந்த வயதுக்கு வரப் பல வருடங்கள் கழிய வேண்டும்.

நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களுள் இந் நாடக மேடை நினைவுகளில் குறிப்பிடாத நாடகங்கள் இரண்டாம் - அவை: “சந்திரஹரி", “காளப்பன் கள்ளத்தனம்” என்பவை.

முதலில் கூறிய “சந்திரஹரி” என்பது ஆங்கிலத்தில் பர்லெஸ்க் (Burlesque) என்னும் நாடகப் பிரிவினைச் சேர்ந்ததாம். இதை 1923ஆம் வருஷம் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்ததும், அத்துயரத்தைச் சற்று மறந்திருக்கும் வண்ணம் என் மனத்திற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டி, எழுதி முடித்தேன். அவ்வருஷம் டிசம்பர் மாதம் அச்சிட்டேன். இம்மாதிரியான நாடகம் தமிழிலும் கிடையாது, சம்ஸ்கிருதத்திலும் கிடையாது. பர்லெஸ்க் என்பது ஏதாவது ஒரு பிரபலமான கதையை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள சந்தர்ப்பங்களுக்கு முற்றிலும் மாறாக, வேறு சந்தர்ப்பங்களை நகைப்புண்டாக்கும்படி கற்பனை செய்து கதையைப் பூர்த்தி செய்வதாம். மேல்நாட்டார் இம் மாதிரியான நாடகங்களும் கதைகளும் பல இயற்றி இருக்கின்றனர். தமிழ் நாடக மேடைக்கு அதைப் போன்ற ஓர் உதாரணம் இருக்க வேண்டுமென்று கருதினவனாய் இச் சந்திரஹரியை எழுதினேன். இதற்கு முதல் நூல் ஹரிச்சந்திரன் கதையாகும்; அம் மன்னன் சத்யவிரதன், என்ன இடுக்கண் நேர்ந்தபோதிலும் சத்தியம் தவறாதவன்; இந் நாடகத்தின் கதாநாயகனான சந்திரஹரி, மறவ நாட்டு மன்னன்; என்ன கஷ்டம் நேரிடுவதாயினும் நிஜத்தைப் பேசாதவன்! இதை வாசிக்கும் நண்பர்கள் சற்று ஆலோ சித்துப் பார்ப்பார்களாயின், எப்பொழுதும் சத்தியமே பேசுவதைவிட, எப்பொழுதும் அசத்தியமே பேசுவது மிகவும் கடினம் என்பதைக் கண்டறிவார்கள். கதையின் மாறுதலுக்கிணங்க, பெயர்களையும் தலைகீழாக மாற்றி யுள்ளேன்; ஹரிச்சந்திரன் என்கிற பெயரை மாற்றி சந்திரஹரி என்றாக்கினேன்; சந்திரமதி என்பதை மாற்றி மதிசந்திரை என்று பெயர் வைத்தேன்; விஸ்வாமித்திரன் என்பது