பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

721


கோயில்களில் இன்னும் உண்டு). தற்காலத்து நிலையைக் கருதுங்கால் சுமார் 50 வருடங்களுக்கு முன் தென் இந்தியாவில் நாடகமாடினவர்கள் பெரும்பாலும் ஆண் மக்களாகவே இருந்தனர். ஏகதேசமாக டம்பாச்சாரி விலாசம் முதலிய சில நாடகங்களில், கணிகையர் வேடம் பூண்டு நடித்ததுமுண்டு. ஸ்திரீகளாக நாடகம் நடித்தது முதல் முதல், நானறிந்தவரை பாலாமணி கம்பெனியில்தான். மேற்குறித்தபடி நாடக மேடை ஏறிய ஸ்திரீகளெல்லாம் பெரும்பாலும் கணிகையராக யிருந்தபடியால், நாடகம் பார்ப்பதற்கே அக் காலம் உயர்குல ஸ்திரீகள் போவது இழிவாகக் கருதப்பட்டது. அப்படி யிருக்கவே, ஸ்திரீகள் நாடக மேடை ஏறுவதென்பது கனவிலும் கருதப்படாத விஷயமாயிருந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தமிழ் நாடக மேடையின் நிலையைக் கருதுங்கால், ஒருவாறு அதனை, எலிசபெத் (Elizabeth) ராணியின் காலத்தில் இங்கிலாந்தில் நாடக மேடையிருந்த ஸ்திதிக்கு ஒப்பிடலாம் - இரண்டிலும் ஏறக்குறைய எல்லா ஸ்திரீ பாகங்களும், அழகிய ஆண் பிள்ளைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்காலம் தமிழ் நாடக மேடையிருக்கும் ஸ்திதியை இரண்டாவது சார்லெஸ் (Charles II) காலத்தில் இங்கிலாந்திலிருந்த நாடக மேடையுடன் ஒப்பிடலாம் - இரண்டிலும் மேடையின்மீது தோன்றும் ஸ்திரீகளில் பெரும்பாலார் விலைமாதர்களாகவே இருக்கின்றனர். சென்ற இரண்டொரு வருடங்களாகத்தான் குல ஸ்திரீகள் தங்கள் கணவருடனோ அல்லது நெருங்கிய பந்துக்களுடனோ நாடக மேடை ஏற ஆரம்பித்திருக்கின்றனர். இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், மேற்கத்திய நாகரிகமானது இங்குப் பரவப் பரவ, கற்றிந்த குல ஸ்திரீகளும் விரைவில் தமிழ் நாடக மேடைமீது ஆட ஆரம்பிப்பார்கள் என்பது நிச்சயம். ஆயினும் ஐரோப்பிய ஸ்திரீகளைப்போல் கல்வி கற்று ஆண் மக்களுடன் சமானமாகக் குலவும் வழக்கம் நமது நாட்டில் பரவும் வரையில்; நமது குல ஸ்திரீகள் நாடக மேடையேறுவது அவ்வளவு உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.

இவ் விஷயத்தைப்பற்றிக் கருதுங்கால், சிலர், நமது நாடக மேடையில் ஸ்திரீகளின் பாகம், ஸ்திரீகளே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, ஆண் மக்கள் எவ்வளவு