பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப சம்பந்த முதலியார்

725


அறிய வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்பின், நான் இவ் வருஷம் எழுதி அச்சிட்ட “பிராம்மணனும் சூத்திரனும்” என்னும் தமிழ் நாடகத்தை வாசித்து அறிந்து கொள்வார்களாக. இந்நாடகம் நான் மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டு எழுதிய நாடகம். இதை வாசித்த, பிராமணன் சூத்திரன் என்னும் துவேஷமில்லாத இரு ஜாதியாரும் என்னைப் புகழ்ந்திருக்கின்றனர்; அத் துவேஷமுள்ள இரு திறத்தாரும் என்னை நிந்தித்திருக்கின்றனர்; ஆயினும் அப்படி என்னை நிந்தித்தவர்களில் ஒருவராவது, நான் எழுதியதில் இது தவறு என்று ஒன்றையும் எடுத்துக் காட்டினாரில்லை. இதையே நான் எழுதிய இந்நாடகத்திற்குப் பெரும் புகழாகக் கொள்கிறேன். இந்நாடகத்தைப்பற்றி இன்னும் ஏதாவது அறிய விரும்பின், எனது நண்பர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஐயர் இதைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தைப் படிப்பார்களாக.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் நாளது வரையில் நடிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இதை வாசிப்பவர்கள், நான் கூறாமலே அறிந்து கொள்ளலாம்.

இவ் வருஷம் அவ்விடத்தில் டிஸ்டிரிக்ட் முன்சீபாயிருந்த எஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் பி.ஏ., பி.எல்., அவர்கள் விருப்பத்தின்படி மன்னார்குடிக்குப் போய், அவர் எழுதிய “நளன்” என்னும் தமிழ் நாடகத்தை ஒத்திகைகள் செய்து நடத்தினேன். இந் நாடகத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதுதான் தமிழ் நாடக மேடையில் பிரபலமான ஜீவனோபாயமாக நாடகமாடும் நடிகர்களும், (Professional actors) ஆமெடூர்களும் (Amateur) ஒருங்கு சேர்ந்து மேடையின்மீது ஒரு நாடகத்தை நடத்தியதாம். கும்பகோண வாசியாகிய, தமிழ் நாடக மேடையில் பெயர்பெற்ற நடிகரான பி.எஸ். வேலு நாயரும் சென்னைவாசியாகிய பெயர்பெற்ற அயன் ஸ்திரீ பார்ட் நடிகரான அநந்த நாராயண ஐயரும், நளனாகவும் தமயந்தியாகவும் நடித்தனர். நாடகாசிரியராகிய பார்த்தசரதி ஐயங்கார் ஒரு முக்கியப் பாகமாகிய பாஹுகனாக நடித்தார். தேசியத் தொழிலுக்காக மிகவும் பாடுபவரும், தமிழ் நாடகமாடுவதில் கீர்த்தி வாய்ந்தவருமான நடராஜப் பிள்ளை அவர்கள்