பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

726

நாடக மேடை நினைவுகள்


வேடுவனாக நடித்தார்; நான் ஒரு ஜோஸ்யனாகவும், பிராமணனாகவும் நடித்தேன்; இதர வேடங்கள் எல்லாம் மன்னார்குடியிலிருக்கும் சில வக்கீல்கள் முதலியோர் எடுத்துக் கொண்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே மன்னார்குடிக்குப் போய் ஒத்திகைகள் நடத்தினேன். நாடகத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வேலு நாயரும் அநந்தநாராயண ஐயரும் வந்து சேர்ந்தனர். அன்று சாயங்காலம் நான் அவர்களை நளன் தமயந்தி பிரியும் காட்சியை நடிக்கும்படி கேட்க, அவர்கள் அவ்வாறே செய்தனர். காட்சி முடிந்ததும் “நீங்கள் நடித்தது நன்றாகத்தானிருக்கிறது; ஆயினும் இக்காட்சியை இப்படி நடித்தால் இன்னும் நன்றாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லி, அக்காட்சியை என் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டினேன். அதன் பேரில் அவர்களிருவரும், “மற்றக் காட்சிகளை நாளை காலை உங்களிருப்பிடம் வருகிறோம்; அங்கு உங்கள் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டுங்கள்” என்று கேட்டனர்; அதன்படியே மறுநாள் பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டின் மேல் மாடியில் நடித்துக் காட்டினேன். அவர்களிருவரும் நான் சொன்னதையெல்லாம் அன்புடன் கிரஹித்து நாடக தினம் அவ்வாறே நடித்தனர். ஸ்ரீமான் நாடராஜப் பிள்ளையும் அவ்வாறே செய்தனர். நாடகத் தினத்தில் வந்திருந்தவர்களெல்லாம் நாடகம் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்று புகழ்ந்தனர். இதையே நாடகத்தின் ஒத்திகை நடத்துவதில் எனக்குக் கொஞ்சம் திறமையுண் டெனப் பிறர் ஒப்புவதாகக் கொள்கிறேன்.

இந் நாடகத் தினம் சுமார் 900 சில்லரை ரூபாய் வசூலாயது; செலவு போக, ரூபாய் 500 சில்லரை அங்குள்ள ஒரு சமாஜத்திற்குப் பார்த்தசாரதி ஐயங்காரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.

1934ஆம் வருஷம் எங்கள் சபை திருவனந்தபுரம் மஹாராஜா அவர்களால் அழைக்கப்பட்டு திருவனந்தபுரம் போய், சில நாடகங்களாடிற்று; இதன் மூலமாக மஹாராஜா அவர்களும் மஹாராணி சேது பார்வதி அம்மாளும் எங்கள் சபைக்கு பேட்ரன்கள் (Patrons) ஆயினர்.