பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப சம்பந்த முதலியார்

727


இவ்வாண்டு நான் கல்கத்தாவுக்குப் போய் “சதிசுலோசனா” என்னும் கதையைத் தமிழ் பேசும் படமாகத் தயாரித்தேன். இவ் விஷயத்தைப்பற்றியும், மறுவருஷம் பம்பாய்க்குப் போய் “மனோஹரன்” தமிழ் பேசும் படத்தில் நான் புருஷோத்தமனாக நடித்த விஷயமும், இந் நாடக மேடை நினைவுகளில் எழுதுவதற்கில்லை. ஸ்வாமியின் கருணையினால் அவ் விவரங்களையெல்லாம் “பேசும் படக்காட்சி அனுபவங்கள்” என்று வேறு புஸ்தகத்தில் அச்சிடலாமென்றிருக்கிறேன்.

இந்த சதி-சுலோசனா கதையைப் பேசும் படக் காட்சிக்குத் தயாரித்தபடி, நாடகமாக இவ்வருஷம் அச்சிட் டேன். அன்றியும் “குறமகள்", “வைகுண்ட வைத்தியர்” என்னும் இரண்டு சிறு நாடகங்களை எழுதி இவ் வருடம் வெளியிட்டேன். இவ்விரண்டும் எங்கள் சபையில் பிறகு ஆடப்பட்டன. இவ்வருடம் நான் எழுதிய பெரிய நாடகமாவது “உத்தம பத்தினி” என்பதாம். இதை நான் இதுவரையில் எழுதியுள்ள நாடகங்களில் ஒரு சிறந்ததாக மதிக்கிறேன்; இதை ஆடுவது கொஞ்சம் கஷ்டம்; நாடகக் கதை முழுவதும் இரண்டு மணி சாவகாசத்தில் நடக்கிறது; இது கிரீக் நாடகங்களை ஒட்டி இவ்வாறு எழுதியபடியாம்; அன்றியும் நடிப்பதற்கும் சரியாக இரண்டு மணிதான் பிடிக்கும். இதை எங்கள் சபையைக் கொண்டு நடத்த வேண்டுமென்று ஏற்பாடு செய்தும், எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் மறுபடியும் வெளியூருக்கு மாற்றப் பட்டபடியால், தவக்கமாயிருக்கிறது; கூடிய சீக்கிரத்தில், ஈஸ்வரன் கிருபையால், இதில் நடிக்கலாமென்று உத்தேசித்திருக்கிறேன்.

1935ஆம் வருஷம் நான் நான்கு மாதத்திற்கு மேல் பம்பாய்க்கு மனோஹரன் பேசும் படக் காட்சிக்காகப் போக வேண்டி வந்தபடியால், சபையின் காரியங்களை அதிகமாகக் கவனிக்க முடியாமற் போயிற்று.

1936ஆம் வருஷம் எங்கள் சபையானது 95,000 ரூபாய்க்கு சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள “தியாகராஜ கட்டடங்கள்” என்பதை விலைக்கு வாங்கியது; அதில் ஒரு நாடக சாலை கட்ட ஏற்பாடு செய்து கொண்டு வருகிறோம்;