பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/743

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

728

நாடக மேடை நினைவுகள்


அது எப்பொழுது முடியுமென்பது ஈசன் திருவுள்ளத்திற்குத் தான் தெரியும். இவ்வருடம் நான் “நல்லதங்காள்” என்னும் பழைய கதையைப் புதிய மாதிரியில் எழுதி அச்சிட்டேன். உத்தம ஸ்திரீயான நல்லதங்காள் தன் ஏழு மைந்தர்களையும் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்வதற்கு ஒரு புதிய காரணத்தைக் கற்பித்துள்ளேன். இந் நாடகம் பேசும் படக்காட்சிக்குத் தக்கபடி அமைக்கப் பட்டுள்ளது. மேலும், இவ்வருஷம் நாடக மேடையில் தேர்ச்சி பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு என் அனுபவத்தைக் கொண்டும், நான் படித்ததைக் கொண்டும் உபயோகப்படும்படி “நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி?” என்னும் பெயர் கொண்ட ஒரு சிறு புஸ்தகத்தை வெளியிட்டேன்.

1937ஆம் ஆண்டில் “ஏமாந்த இரண்டு திருடர்கள்”, “மாறுவேட விருந்து” அல்லது சபாபதி ஐந்தாம் பாகம்; “சோம்பேறி சகுனம் பார்த்தது", “கண்டவுடன் காதல்", “காவல்காரர்களுக்குக் கட்டளை", “மன்மதன் சோலை” என்னும் ஆறு சிறு நாடகங்களை அச்சிட்டிருக்கிறேன். இவைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு உபயோகப்படுமென எண்ணுகிறேன். மேற்கண்டவற்றுள், மூன்றில் ஸ்திரீ பாத்திரமே இல்லாதபடியால் சிறுபிள்ளைகள் எளிதில் நடிக்கக் கூடுமெனக் கருதியே இவைகளை வெளியிட்டேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், உருது ஆகிய ஏழு பாஷைகளில் நடித்ததுடன், இவ்வருஷம் நான் ஹிந்தி பாஷை கற்க ஆரம்பித்து, தசராக் கொண்டாட்டத்தில் “ஜு மதத்தியப் பெண்” என்னும் ஹிந்தி நாடகத்தில் ரோமாபுரி அரசனாக நடித்தேன்.

என்னிடமுள்ள குறிப்புகளின்படி நான் இதுவரையில் 529 முறை நாடக மேடையின் மீது ஏறியிருக்கிறேன்; “இவற்றுள் நான் வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டது 109 ஆம்; நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68; இந்நாடகங்கள், என் அனுமதியின் மீது 4070 முறை எங்கள் சபையோராலும் மற்றவர்களாலும் ஆடப்பட்டிருக்கின்றன. என் அனுமதி