பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

67


இதன் பேரில், சபையை ஆதரிக்கத் தக்கவர்கள் என்று எங்களுக்குத் தோன்றிய பெரிய மனிதர்களை எல்லாம் பார்த்து வந்தோம். அவர்களுள் இரண்டு பெயர்களுடன் நடந்த விருத்தாந்தத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராமசாமி ராஜு என்பவரைப் பார்க்கப் போனோம். இவர் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்தவர். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லவர். தமிழில் இதற்குச்சில வருஷங்களுக்கு முன்னமே “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை எழுதி அச்சிட்டவர். ஆகவே ‘எங்கள் சபையை இவர் ஆதரிக்கத் தக்கவர் என்றெண்ணி ; இவரிடம் சென்றோம். இவரது பங்களாவின் கதவு சாத்தப்பட்டிருந்ததால், அரைமணி சாவகாசம் வெளியில் உட்கார்ந்திருந்தோம். காலை எட்டு மணிக்குமேல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உடனே நாங்கள் வணங்கி, எங்களை இன்னாரென்றும் இன்ன காரியத்திற்காக வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துக்கொண்டோம். அதன்பேரில் கோர்ட்டில் சாட்சியை கிராஸ் (Cross) கேள்விகள் கேட்பது போல் எங்களைக் கேட்கத் தொடங்கினார். அவற்றிற் கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டே வந்தேன். என்ன நாடகங்கள் போடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எனது இரண்டு நாடகங்களின் பெயரையும் சொன்னேன். யார் அவைகளை எழுதியது? என்று அவர் கேட்க, நான்தான் எழுதினேன் என்று பதில் உரைத்தேன். உடனே கண்கள் மலர, என்னை விழித்துப் பார்த்தார்! அப்பொழுது எனக்கு வயது 19; உருவத்தில் அவ்வளவு வயதுடையவனாகக்கூட நான் தோற்றவில்லை என்று என் அக்காலத்து நண்பர்கள் பல தடவைகளிற் கூறியதுண்டு. ஆகவே இந்தச் சின்னப் பையனாவது நாடகமெழுதுவதாவது என்று ஆச்சரியப்பட்டார் போலும். பிறகு சுந்தரியென்னும் நாடகத்தின் கதையைக் கேட்க, சுருக்கிச் சொன்னேன். அதனுடன் விடாமல், இந்த நாடகத்தில் பாட்டுகள் உண்டோவென்று கேட்டார். உண்டுடென்று சொல்ல தாயுமான முதலியார் கட்டியிருக்கிறார் என்று கூற, அதில் ஏதாவதொன்றைப் பாடு என்று கேட்டார்! உடனே, என் யௌவனக் கொழுப்பி னாலும், சபையின் காரியத்தை எப்படியாவது ஈடேற்ற