பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நாடக மேடை நினைவுகள்


விலாச சபையின் நாடகங்களைப் பார்ப்பதற்குமுன் நாடகம் என்பதையே வெறுத்திருந்தவர்கள், அதை ஒரு முறை பார்த்தபின் மனம் மாறியிருக்கிறார்கள். இதையே எனது சிறு முயற்சிக்கு ஈசன் அளித்த பெரும் பரிசாக எண்ணுகிறேன்.

பிறகு சென்னை ராஜதானியில் எங்கள் சபையை ஆதரிப் பதற்கிசைந்த பெரிய மனிதர்களின் பெயரை யெல்லாம் அச்சிட்டு ஒரு பிரசுரம் வெளிப்படுத்தினோம். இதற்கு முக்கியக் காரணம் நாடகமாடுவது ஓர் இழிதொழிலாக மற்றவர்கள் எண்ணக்கூடாது என்று வற்புறுத்தும் பொருட்டே.

மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு விக்டோரியா பப்ளிக் ஹாலில் இரண்டு நாடகங்கள் ஆடுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினோம். முதலில் இரண்டு நாடகங்களுக்காக ஹால் குத்தகைத் தொகையைச் சேகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அக்காலத்தில் தினம் ஒன்றுக்கு வாடகை ரூபாய் 50 கொடுக்க வேண்டியதாயிருந்தது. இப்போது ரூபாய் 30க்குக் கிடைப்பது போல் அக்காலம் கிடையாது. எங்கள் சபையிலோ பணம் இல்லை. முன்னிருந்ததைவிட நாளடைவில் சில அங்கத்தினர் அதிகமாய்ச் சேர்ந்த போதிலும், அதற்கேற்றபடி செலவும் அதிகமாக ஆரம் பித்தது. இதன் பொருட்டு, எங்கள் பிரசிடென்டாகிய ராஜாசர் சவலை ராமசாமி முதலியாருக்கு எழுதி, அவரிடமிருந்து ரூபாய் 50 நன்கொடையாகப் பெற்று, அதை முதல் நாடகத்துக்காகக் கட்டி விட்டோம். புதுச்சேரியில் அக்காலத்தில் தனவந்தராயிருந்த கூனிச்சம்பெட் லட்சுமண சாமி செட்டியாருக்கு நான் எழுதி அவரிடமிருந்து ரூபாய் 50 பெற்றுக் கொடுக்க, அதை இரண்டாவது நாடகத்திற்கு வாடகையாகக் கட்டினோம். இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலருக்கு, ஒரு நாடகம் ஆடுவதென்றால் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன என்பதே தெரியாதிருக்கலாம் என்றெண்ணி எங்கள் நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.

ஒரு நாடகமாடுவதென்றால் ஒரு கலியாணம் செய்வதற்குச் சமானமாகும்; முதலில் கலியாணங்களிற் போல் பத்திரிகைகள் அச்சிட்டு அனுப்ப வேண்டும்; பந்தல்காரர் களுக்கு ஏற்பாடு பண்ண வேண்டும்; மேளக்காரனுக்குச் சொல்ல வேண்டும்; சமையல்காரனை அமர்த்த வேண்டும்;