பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

71


புஷ்பக்காரனுக்குத் திட்டம் செய்ய வேண்டும்; புடவைகள் முதலியன சேகரிக்க வேண்டும்; விளக்குகளுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்; கலியாணத்திற்கு ஒரு வாத்தியார் வேண்டியிருந்தால், நாடகம் நடத்தவும் ஒரு வாத்தியார் வேண்டியிருக்கின்றது!

சுந்தரி, புஷ்பவல்லி இரண்டு நாடகங்களுக்கும் சுவற்றில் ஒட்டும்படியான நோட்டீசுகள், ஒன்றாய் அச்சடித்தோம். அத்தனை பெரிய சுவர் நோட்டீசுகள் அது வரையில் இந்திய நாடகக் கம்பெனிக்காக ஒருவரும் அச்சிட்டதில்லை. கோவிந்தசாமி ராவ் நாடகக்கம்பெனி, சுப்பராயாசாரி கம்பெனி முதலியவர்களெல்லாம் சிறுசிறு நோட்டீஸ்களாகத்தான் அச்சிடுவார்கள். நாங்கள் பஞ்ச வர்ணத்தில் பெரிய நோட்டீசுகளாக அச்சிட்டு சென்னையில் ஒரு முக்கிய தெரு பாக்கியில்லாமல் ஒட்டி வைத்தோம். சரியாக, முக்கியமான இடங்களெல்லாம் விடாமல் ஒட்டி இருக்கிறார்களாவென்று, இராக்காலங்களில் சில அங்கத்தினரை அனுப்பி, பரிசோதிக்கச் செய்தோம். யார் இவ்வளவு பெரிய நோட்டீசுகள் ஒட்டினது என்று சென்னைவாசிகள் கேட்கும்படி செய்தோம்.

இதன்றி, 25000 கைநோட்டீசுகள் அச்சிட்டு ஒரு பென்ஷன் சிப்பாயைப் பிடித்து அவனுக்கு ஏறு குதிரை ஒன்று வாடகைக்கு ஏற்படுத்தி, அதன் மீது அவனை ஏற்றி, சேணத்தின் இரு புறத்திலும் இரண்டு பைகளில் நோட்டீசு களை நிரப்பி கையில் ஒரு ப்யூகிளை (bugle) கொடுத்து அனுப்பினோம். அவன் சந்துக்கு சந்து நின்று, ப்யூகிளை ஊதி, ஜனங்கள் சேர்ந்தவுடன் தன்னிடமிருக்கும் கைநோட்டீ களை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு போனான்! இம்மாதிரியாகப் பட்டணமெல்லாம் எங்கள் ஆட்ட நோட்டீசுகளைப் பரவச் செய்தோம்.

இதுவுமன்றி சென்னையிலுள்ள பெரிய மனிதர்களுக் கெல்லாம், பிரத்யேகமாக அறிக்கைப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பினோம். அக்காலத்தில் சபைக்கு குமாஸ்தா முதலிய சிப்பந்தியென்பதே கிடையாது; பத்திரிகைகளை யெல்லாம் அடித்து கவர்களுக்குள் போட்டு மேல் விலாசம் எழுதுவது முதலிய வேலைகளை யெல்லாம் நிர்வாக சபையாராகிய நாங்கள் ஐவருமே செய்தோம் - சம்பளமில்லாமல்.