பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நாடக மேடை நினைவுகள்


என்னுடன் நடித்த சுப்ரமணிய ஐயரைப் பற்றிப் பார்க்க வந்தவர்கள் ஸ்திரீ வேஷம் நன்றாயிருந்தது, பாட்டு சுமார், நடித்தது போதாது என்று கூறினார்கள். விதூஷகன் வேஷம் தரித்த துரைசாமி ஐயங்காரைப் பற்றி அப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நன்றாயிருந்ததென்றே கூறினார்கள். மற்ற நடர்களைப்பற்றி ஒன்றும் விசேஷமாகக் கூறவில்லை ஆயினும், அன்றைத்தின நாடகத்தில் ஜனங்களின் மனத்தையெல்லாம் பூர்ணமாய் சந்தோஷிக்கச் செய்து அவர்களது கரகோஷத்தைப் பெற்றவர், ஒரே காட்சியில் குறத்தியாக வந்த முனுசாமி ஐயர் என்பவரே! இதை நாடக மேடையில் பிரசித்தி பெற விரும்பும் எனது சிறிய நண்பர்கள் நன்றாய்க் கவனிப்பார்களாக. சம்கி உடுப்புகளைத் தரித்துக் கொண்டு ராஜாவாகவும் ராஜகுமாரனாகவும் வந்த வேஷதாரி களை விட, விலையுயர்ந்த சரிகைப் புடவைகள் கட்டிக் கொண்டு கதாநாயகியாகவும் ராஜகுமாரியாகவும் வந்தவர்களைவிட, கிழிந்த கறுப்புப் புடவைக் கட்டிக் கொண்டு, முகத்தில் கறுப்பாகத் தோற்றக் கரியைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களுக்குப் பதிலாக, வெண்மணி கருமணிகளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, அலங்கோலமாய் வந்த இந்தக் குறத்தி வேஷதாரியே, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுடைய மனத்தைத் திருப்தி செய்தனர்! காரணம், அரங்கத்தில் வேஷம் தரித்து நடிக்கும் பொழுது மேற்கொண்ட நாடகப் பாத்திரத்தின் குணத்திற்குப் பொருத்தமான வேஷம் தரித்து நடிப்பதே முக்கியம் என்பதாம். என்னைப்பற்றி, எனக்குப் பாடல் நன்றாய் பாடத் தெரியவில்லை என்று உண்மையை எடுத்துரைத்தனர்; பாட்டே பாடத் தெரியாது என்று கூறியிருப்பார்களாயின் அது முற்றிலும் உண்மையாயிருக்கும். நான் நடித்ததைப் பற்றி மறுநாள் ஒரு செட்டியார் எனது நண்பராகிய சுப்பிரமணிய ஐயரிடம் கூறியதே சரியெனத் தோற்றுகிறது. அது, “நீ மொண மொண வென்று ஒருவருக்கும் கேட்காதபடி பேசுவதற்கு, வாயாடி அகமுடையாளைப் பிடித்ததுதான் சரி” என்று செட்டியார் தன்னிடம் சொன்னார் என்பதேயாம். அவர் என்னை வாயாடி என்று அழைத்ததற்கு நியாயமுண்டு; ஒரு காட்சியில், தனிமொழியாக நான்கு பக்கங்கள் வசனம் பேசினேன்! “என்னடா இவன் வள வளவென்று சும்மா பேசிக் கொண்டே