பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

79


மற்றொரு பக்கம் ஓடியது. பிறகு நாங்களிருவரும் மேடையின் மீதிருந்து வேறு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இந்தப் பன்றியானது மேடையின் பேரில் பின்பக்கம் வர ஆரம்பித்தது! அதற்குக் காரணம் என்னவென்று பிறகு விசாரித்த பொழுது, யாரோ தெரியாமல் அதைக் கட்டியிருந்த கயிற்றைப் பின் புறமாக இழுத்துவிட்டதாகத் தெரிய வந்தது. அது அப்பன்றியின் தவறல்ல. ஆயினும் அசந்தர்ப்பமாய் அது அங்கு வருவதை - அதுவும் பின்புறமாக நடந்து வருவதைக் கண்டவுடன் எனக்கு மிகவும் கோபம் வந்தது. நான் வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் என் கையிலிருந்த வில்லால் அதை அடித்து மேடையினின்றும் அகற்றினேன்! இரண்டு மூன்று தினங்கள் கழித்து, எனது நண்பரும் என்னுடன் துரைத்தனக் கலாசாலையில் நான்கு வருடங்கள் ஒன்றாய்ப் படித்தவருமாகிய காலஞ்சென்ற ராமராய நிம்கார் என்பவர் (பிறகு அவர் மந்திரியாகி, பானகல் ராஜா என்கிற பட்டப்பெயர் பெற்றார்), எங்கள் முதல் நாடகத்தைக் குறித்து என்னுடன் பேசியபொழுது, “நீ ஆக்டு செய்தது எல்லாம் நன்றாகத் தானிருந்தது. ஆயினும் பன்றி வேட்டையில், பன்றியை ஈட்டியால் குத்த வேண்டியது நம்முடைய வேட்டை சாஸ்திரமேயொழிய, வில்லால் அதை அடிக்கக் கூடாது” என்று கூறினார். பிறகு நான் நடந்த வாஸ்தவத்தைக் கூற, இருவருமாகப் பெருஞ்சிரிப்புச் சிரித்தோம். இதை நான் தெரிவியாதிருந்தால், “கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு கருடி” என்பது உண்மையாயிருக்கும்.

மேற்சொன்னபடி சனிக்கிழமை இரவு சுந்தரி நாடகம் முடிந்தவுடன் ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் கலைத்து விட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் எல்லோரும் சந்தித்துக் கொஞ்ச நேரம் முந்திய நாள் இரவு நாடகத்தைப் பற்றிப் பேசிவிட்டு, உடனே மறு நாடகமாகிய புஷ்பவல்லியின் ஒத்திகையை ஆரம்பித்தோம். முதல் நாடகத்தில் எங்களுக்குக்குறையாகத் தோன்றியவைகளை யெல்லாம் இந்த நாடகத்தில் சீர்திருத்த முயன்றோம்.

மறு சனிக்கிழமை இரவு சரியாக ஒன்பது மணிக்கு ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகத்தை ஆரம்பித்தோம். இந்த நாடகக் கதாநாயகனான ராஜகுமாரனாக நடித்தவர் சி.பி. சீதாராம நாயுடு என்பவர். அவர் அப்பொழுது வைத்தியக்