பக்கம்:நாடும் ஏடும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூண்டா விளக்காய்த் துலங்குதல் வேண்டும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பிருக்கவேண்டும். நாட்டோரை நடுநிலை பிறழா நல்நீதிபதிகளாக்க உறுதுணை செய்யும் ஊன்று கோலாக உதவவேண்டும்.

தொல்காப்பியம்

நிற்க, நான் இன்று நாட்டோடு, நாட்டு மக்களோடு நீங்காத் தொடர்பு கொண்டு பழகி வருகின்றேன். நீங்களும் உங்கள் கல்வி முடிந்த உடன் அத்தகைய தொடர்பு கொள்வீர்கள் என்றும் துணிபுடையேன். மக்களுடைய அன்றாட வாழ்வை அலசிப் பார்க்கின்றேன். அறிவோடு ஆராய்ந்து பார்க்கின்றேன். எனவே, நாட்டாரோடு நாட்டானாய் நாட்டு மக்களை யறிந்த ஒருவனும், உங்களைப்போன்று கலை பயிலும் மாணவத்தோழர்களும் சந்தித்து அளவளாவுதல் முற்றும் முறையே. முயற்சியோடு நாளும் நாளும் நடாத்துதல் மிக மிக நன்றே.

நான் இன்று நாட்டில் நடமாடி வரும் நானாவித ஏடுகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன். பலவற்றைப்பற்றிப் பண்பாளர்கள் பன்னிப் பன்னிப் புகழ்வதைப் பல முறை கேட்டிருக்கின்றேன். அத்தகைய வித்தகரால் போற்றப்பெறும் பண்டை நூல்களில் ஒன்று, நந்தம் 'தொல்காப்பியம்'. நான் தொல்காப்பியம் தொன்மை நூலென்றும் தமிழிரின் தனித்தமிழ் நூல் என்றும், விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியால் எடுத்

தியம்பும் ஆற்றல் வாய்ந்த அரும் பெரும் பொக்கிஷம் என்றும்; தமிழனின் தனி நாகரிகத்தை நாட்டோர் நன்கு உணர, நயமாக நவிலும் நிகண்டெனவும், தன்னேரிலாத் தமிழ் மொழி தரணியெங்குந் தழைத்தோங்க தகுமுறை வகுத்த ஒப்பிலாப் பண்டைத் தமிழ் இலக்கணமென்றும் அறிவேன். எப்படி? படித்துப் பாங்குறச்சுவைத்ததனாலா? அல்ல. படித்த

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/11&oldid=1547494" இலிருந்து மீள்விக்கப்பட்டது