பக்கம்:நாடும் ஏடும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறிதொன்றாயும் ஏடுகள் அமைக்கப்படும்வரை இனம் எழுச்சியுறுமா? மக்களிடையேயுள்ள மடமைத்தனம் மறையுமா ? ஏட்டின் மூலம் நாட்டின் நிலையறியலாம் மேனாடுகளிலே இது சர்வ சாதாரணம்; அவ்விதம் நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை கலையட்டும் நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின் மக்கள், மக்கள் வாழ்க்கை, அவர்தம் வாழ்க்கை வளன், நாகரிகம் இன்ன பிற யாவும் தெள்ளிதின் விளங்குதல் வேண்டும்; அது ஏட்டோடு நிற்றல் சாலாது, நடமுறையில் நடப்பதையே நவிலும் நூலாதல் வேண்டும்.

ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தின் நிலைக்கு. கருத்திற்குப் பொருந்தாவெனின் அது மாற்றப்பட வேண்டும். இன்றேல் அந்தந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். உள்ளத்தை உள்ளவாறு உணரச்செய்யும் ஏடுகள் தேவை. மடமையை மடியவைக்க வழிகோலும், வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்கள், கதைகள் தேவை. மக்கள் நிலையை உயர்த்த உறுதுணையாகும் ஏடுகள்தான் தேவை. இன்றேல் நமக்கு ஏடுகள் வேண்டாம். அவற்றால் இனம் இழிவுற வேண்டாம். மடமைக்கு வித்திடும் மாண்புள்ள மறைகள் வேண்டாம். ஏன்? பண்டை இலக்கியங்களில்லாமல் எந்த நாடும் முன்னேற வில்லையா? உலகத்தாரால் "உயர்ந்த நாடு" என்று உரைக்கப்படவில்லையா! இலக்கியத்தால்தான் நாடு முன்னேற முடியுமா ? சான்றாக, துருக்கியும் ஆஸ்திரேலியாவும் பண்டைய இலக்கியப் பெருமை வாய்ந்த நாடுகள் அல்லவே! மக்கள் அங்கு மாக்களாகி விட்டனரா; இலக்கியமில்லாத காரணத்தால், கருத்துக்கினிப் பூட்டும் காவியங்களோடு காலத்துக்கேற்ற கதைகளும் நாளடைவில் தோன்றத்தான் செய்யும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்புள்ள நாடுகள் என்றும் நலியாது. நாட்டிலே சிறந்த ஏடுகள் எல்லையற்றவையிருப்பினும் அந்நாட்டிற்கும் அவ்வேடுகட்கும் சிறிதும் சம்பந்தமின்றிச் சதுர் ஆடிக்கொண்டிருந்தால் அந்நாடு நாளடைவில் நசித்துப்போகும். கலை நாகரிகம் யாவும் மறைந்தொழியும். பண்டைமான் தமிழும் இங்ஙனம்

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/19&oldid=1547537" இலிருந்து மீள்விக்கப்பட்டது