பக்கம்:நாடும் ஏடும்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பது கடமை என்று கொண்டாலும் அது கருத்துக் களங்கம் விளைத்தல் கூடாது.

சான்றாக, பாரதத்திலே ஐவருக்குந் தேவியான பாஞ்சாலியை எடுத்துக்கொள்வோம். அவளைப் பாண்டவர் சூதிலே தோற்றனர். வென்ற துரியோதனன் வீரமுடன் தம்பிக்குக் கட்டளையிட்டான் துரௌபதையை சபைக்குக் கூட்டிவா வென்று, துச்சாதனன் துரௌபதையை அழைத்தான், அவள் தான் வீட்டுவிலக்காயிருப்பதால் அரசசபைக்கு வரலாகாது என்றாள். துச்சாதனன் அவள் தங்கள் அடிமையென்றும் தருமன் முதலானோர் அவளைத் தங்களிடம் சூதாட்டத்தில் பணையமாக வைத்துத்தோற்றமையால் அவள் தங்கள் சொற்படி நடக்க வேண்டுமெனவும் நவில்கின்றான். கணவனால் கண்ணியமாகப் பந்தயத்திலே தோற்கடிக்கப்பட்ட தான், கணவன் சொற்படி கருத்துப்படி நடக்கக் கடமைப்பட்டவள் என்று அறிந்தபின்னரும், அவள் கேட்கின்றாள் பாண்டவர் என்னை முன்தோற்றனரா அன்றித் தங்களைத் தோற்றபின் என்னை தோற்றனரா என்று. தங்களைத் தோற்றுப்பின் தன்னைத் தோற்றனர் என்பதறிந்தவுடன், தாங்கள் அடிமையாயின் பின் தன்னைப் பந்தயம் வைக்க அவர்கட்கு உரிமையில்லை; ஆகவே தான் துரியோதனாதியர்க்கு அடிமையாக நியாயமில்லையே என்று தன் கருத்தைக் கூறினாள். அரசவையில் முறையிட்டாள். பிறகு பலாத்காரமாக அவள் துகில் உரியப்பட்டபோது; கண்ணன் அருளை வேண்ட, "சேலையவிழ்ந்த நேரத்திலே தட்டாது காட்சியளிக்கும் தனது இயற்கைக் கேற்ப மாதவனும் மங்கை மானங்காத்தான் என்று கதை சொல்லப்படுகின்றது. கடமையை கருத்தோடு சேர்த்து வாதிட்ட பாஞ்சாலியின் அளவுக்காவது, இயற்பகையார் தம் இல்லக்கிழத்தி பிராமணரை நோக்கி, ஐயா என் கணவர்தான் உமக்கடிமை நானல்ல; அவருக்குத்தான் சோதனை; எனக்கல்ல என்றாவது கூறியிருக்கக் கூடாதா?

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/28&oldid=1547545" இலிருந்து மீள்விக்கப்பட்டது