பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குறித்தபடி, நானும் மற்ற இருவரும்.எங்களுக்குரிய இடங்களில் அமர்ந்தோம்.

வரவேண்டியவர்கள் எல்லோரும் வந்தானதும் படியை அகற்றி விட்டார்கள். விமானக் கதவு மூடப்பட்டது.

"புகைபிடிக்காதீர்கள். கச்சையை (பெல்ட்டை) மாட்டிக் கொள்ளுங்கள்" என்ற அறிவிப்புக் காதில் விழுந்தது. ஒவ்வொரு நாற்காலியோடும் ஒரு 'கச்சை'யைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அக்கச்சையை மாட்டிக்கொண்டேன். மற்றவர்களும் மாட்டிக் கொண்டார்கள். ஏன்? விமானம் மேலே கிளம்புகிறபோது உட்கார்ந்திருப்பவர்கள், முன்னே விழக்கூடும். கச்சையை மாட்டிக்கொண்டால் விழ நேரிடாது.

விமானம் புறப்பட்டது. புறப்பட்டதும் மேலே கிளம்பவில்லை. தரையிலேயே சிறிது துாரம் உருண்டு சென்றது. கிளம்பும் முனைக்குச் சென்றதும், ஒரே இரைச்சல்; சில வினாடிகள் இப்படி; அவ்வளவு மூச்சுப் பிடித்து மேலே எழும்பிற்று; எழும்பியவாறே பறந்தது. பூமிக்குச் சில அடி உயரத்தில் பறந்தோம். உயரம் வளர்ந்தது. மெள்ள மெள்ள வானத்தில் பறந்தோம்.

இருபத்தையாயிரம் அடி உயரத்தில் செல்கிறோம். இருநூற்று எண்பது மைல் வேகத்தில் பறக்கிறோம். இன்னும் ஐந்து மணி நேரத்தில் 'டாஸ்கண்ட்' அடைவோம். இனி 'பெல்ட்டை' அவிழ்த்து விடலாம்” என்று விமானப் பணிப்பெண் அறிவித்தார். 'அப்பாடி' என்று பெருமூச்சு விட்டேன்; கச்சையைக் கழற்றிவிட்டேன்.