பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

முறை. பள்ளிக்கூடத் தலைவரை எப்படி அழைப்பார்கள் ? தலைமையாசிரியர் என்று சொல்வதில்லை. பள்ளிக்கூட இயக்குநர் என்றே சொல்ல வேண்டும். இயக்குநர் என்பதே-தலைமையாசிரியர் என்பதன்று-தலைவரது பட்டம், பல பள்ளிகளையும் நெறிப்படுத்துபவருக்கு என்ன பட்டம் என்ற ஐயம் எழுகிறதா? 'பள்ளிகளின் தலைவர்' என்பது, அங்குள்ள 'பெரிய கல்வி அதிகாரியின்' பட்டம். நான், சோவியத் நாட்டில் வேலையில் இருந்தால், பொதுக் கல்வி இயக்குநர் என்று கூப்பிடமாட்டார்கள். 'பள்ளிகளின் தலைவர்' என்று கூப்பிடுவர்.
பெயர் ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்துவோம். பள்ளிகளின் உட்புற நிலையைச் சிறிது காட்டுகிறேன். தோட்டம் இல்லாத பள்ளியே இல்லை. நகரத்தின் நடுவில் உள்ள பள்ளியில் கூடத் தோட்டம் உண்டு. ஒன்றில் சிறு தோட்டம், மற்றொன்றில் பெருந்தோட்டம். அளவில் வேற்றுமை காணலாம். உண்மை, இன்மை வேற்றுமையைக் காணவில்லை. தோட்டம், பெயருக்கா ? அன்று ! உண்மையான தோட்டம். பூத்து வரவேற்கும் செடிகள், காய்த்துக் குலுங்கும் மரங்கள், எல்லாப் பள்ளிகளிலும் எங்களே வரவேற்றன. அது அவனுடைய செடி, இது இவளுடைய மரம்’ என்று மாணவ மாணவிகள் பெருமையோடு சுட்டிக் காட்டும் நிலையையும் இரண்டொரு இடங்களில் கண்டோம். அவற்றை நட்டு வளர்க்கும் மகிழ்ச்சி குறிப்பிட்ட மாணவருடையதாம்.