பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

'இவ்வோட்டல், புரட்சிக்குமுன் தொடங்கப் பட்டது. அதோ சுவர்களிலே பாருங்கள், ஒவியங்களை. தலைக்கு மேலே பாருங்கள் அழகிய சித்திரங்களை. இத்தனையும் கட்டியபோதே தீட்டப்பட்டவை. புரட்சியின்போது, இவ்வோட்டலில் ஒரு கல் கூடச் சேதமாகவில்லை. அன்று இருந்ததுபோலவே இன்றும் காக்கப்படுகிறது. ஏதாவது வசதிக்குறைவு இருந்தால் சொல்லத் தயங்காதீர்கள். எல்லா உதவிகளும் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறோம். இம்மேசை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நல்லது. எல்லாவேளையும் இங்கேயே உட்காருங்கள். பரிமாற வசதியாக இருக்கும். உங்களுக்குத் தனியான உணவு தேவையா? முன்கூட்டியே சொல்லி விடுங்கள். ஆயத்தஞ் செய்து வைக்கிறோம். ஆற அமர சுவைத்துச் சாப்பிடுங்கள். பின்னர் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு விலகினார் நிர்வாகி.
இதற்குள் பரிமாறுகிறவர், எங்கோ போய் விட்டு மீண்டும் வந்து சேர்ந்தார். வெறுங்கையோடு அன்று உணவோடும் அன்று இந்திய தேசியக் கொடியோடு ; அதை ஒரு கட்டையில் செருகிப் பறக்கவிட்டிருந்தார்கள். அதை எங்கள் முன் மேசையில் வைத்தார். நீங்கள் இருக்கும்வரை இம்மேசை உங்களுக்கே’ என்றார். அக்கம்பக்கம் பார்த்தோம். வெவ்வேறு மேசைகளில் வெவ்வேறு நாட்டுக் கொடிகளைக் கண்டோம். தங்கும் விருந்தாளிகளின் நாட்டுக் கொடியை மேசைமீது வைத்த 'ரிசர்வ்' செய்வது அவர்கள் வழக்கமாம்.