பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

திரு.நாராயணசாமி பிள்ளை

இவர் சுப்பிராயாசாரி கம்பெனியில் அரிச்சந்திரா நாடகத்தில் மயானத் தோட்டியாக நடித்தவர். அந்த கம்பெனி பிரிந்த பிறகு தானாக ஒரு நாடக கம்பெனியை ஏற்படுத்தி முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம் அவ்வளவு உயர் தரம் அல்ல. ஆயினும் நடிப்பதில் கெட்டிக்காரர். இவர் நடித்ததைப் பன்முறை பார்த்திருக்கிறேன்; ஒரு முறை தன் கம்பெனியை அழைத்துக் கொண்டு இலங்கைக்குப் போய் பல நாடகங்கள் நடித்தார். இவர் தமிழ் நாடகத்திற்கு முக்கியமாக செய்த தொண்டு, அச் சமயம் இலங்கையில் பிரபலமாயிருந்த கண்டிராஜன் கதையை நாடகமாக எழுதச் சொல்லி மிகவும் நன்றாய் நடித்ததேயாம். அந்த நாடகத்திற்காக கண்டி அரசர்கள் முதலியோர் அக் கதை நிகழ்ந்த காலத்தில் எந்தெந்த உடையை தரித்தார்களோ அதே மாதிரியாக கொஞ்சமும் மாறுபாடில்லாமல் நடிகர்களை உடைகள் தரிக்கச் செய்து நடத்தியதேயாம். இது தான் முதல் முதல் காலத்திற்கேற்ற கோலம் நடிகர்கள் பூண்டது என்று ஒருவாறு நான் கூறக்கூடும் இதன் பிறகுதான் மற்ற நாடக சபைகள் (சுகுண விலாச சபையார் உட்பட) இந் நல் வழக்கத்தைத் தொடர ஆரம்பித்தது என்று கூறலாம்.

திரு. சுப்பிராய ஆசாரி

ஒரு நாள் நான் தெரு திண்ணையில் நின்றுகொண்டு என் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கிழவனார் கையில் தடியுடன் நடந்துபோனார். என் நண்பர் இவர்தான் சுப்பிராய ஆசாரி என்று சுட்டிக் காட்டினார். அப்போது நான் இவர் தானா அரிச்சந்திரனாக நடிப்பவர்? என்று ஆச்சரியத்துடன் சொன்னேன். பிறகு கொஞ்ச காலம் பொறுத்து இவர் நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று என் வீட்டருகில் அக் காலத்திலிருந்த ஓர் வெளியில் மூங்கிலால் போட்டிருந்த நாடகக் கொட்டகைக்குப் போனேன். அன்று சுப்பிராய ஆசாரி மயான காண்டத்தில் அரிச்சந்திரனாக நடித்ததைப் பார்த்த போது நான் அன்று பார்த்த கிழவனரா என்று ஆச்சரியப் பட்டேன். மிகவும் முடுக்காயும் நடுவயதுடையவராயும் அச் சமயம் தோன்றினார். அப்போதுதான் மாறுவேடம் பூணுவதின் மகிமையைக் கண்டேன். இவர் நன்றாகப் பாடினார். ஆயினும் மயானத்தில் தோட்டியாக இருந்த இவர் தலையில் ஒரு சரிகை