பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பேச்சாளனாகிய என்னைப் பேசுமாறு அழைத்ததே சற்று விநோதமாகவும் அவருடைய வெறுப்பைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது. அவர் பேசியதாவது “மகாதேவன் பேசி முடிச்சிட்டாரு. இப்ப ஞானசம்பந்தமாம். பச்சையப்பாவாம். அவர் தமிழில் பேசப்போறாராம். நாம கேட்டுத்தான் ஆவணும். பேசுங்க” என்றார். அந்த இளவயதில் என்னுடைய இரத்தக் கொதிப்பு மிகுதியாயிற்று. எதிரே பகவான் இராமகிருஷ்ணர், விவேகானந்தர் இருவருடைய படங்களும் வைக்கப்பட்டிருந்தன. ‘தலைவர் அவர்களே’, என்றுகூட விளிக்காமல் கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்து “தயைகூர்ந்து எல்லோரும் அந்த இரண்டு படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். அதில் முண்டாசு கட்டிக்கிட்டு இருப்பவர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அறிவு வடிவானவர். இதோ என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே தலைவர் இவர் மாதிரி அறிவு வடிவானவர் அவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா? அதற்காகத்தான் சொன்னேன். இவ்வளவு பெரிய இந்த அறிவு வடிவம், யார் காலில் போய் விழுந்தது தெரியுமா? பக்கத்துப் படத்தில் தெய்வீகப் புன்னகையோடு ஒருத்தர் இருக்கிறார் பாருங்க! அவர் தற்குறி நம்பர் ஒன். இதை நான் சொல்லவில்லை. விவேகானந்தரே “You are the greatest illiterate in the world” என்று தம் குருநாதரிடமே நேரில் சொன்னார். இதுதான் ஆச்சரியம். இந்த அறிவெல்லாம் ஒரு பைசாவிற்குக்கூடப் பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு, அதைவிட உயர்ந்தது இறையுணர்வு. அதையும் விட உயர்ந்தது இறையனுபவம். அந்த நிலையை அடைந்துவிட்டவர் திருவடிகளில் அறிவுக் களஞ்சியங்கள் போய் வீழுவதில் புதுமையொன்றுமில்லை” இப்படித் தொடங்கி எனக்குக் கொடுத்த 20 நிமிடங்களும் இதே கருத்தை விரிவு படப்பேசினேன்.