பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ♦ 105


கொண்டார். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தொல்காப்பியம், மரபுக் கவிதைகள் என்பவைபற்றித் தொடங்கிய உரையாடல் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதனிடையில் மூன்று டம்பளர்கள் காபி வர, மூவரும் அதனை அருந்தினோம். காபியை ஒரு வாய் குடிப்பதும் சில வாக்கியங்கள் பேசுவதும், மறுபடியும் குடிப்பதும், மறுபடியும் பேசுவதுமாகக் கவிஞர் இருந்தார். அவர் இருந்த நிலை 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் என் மனத்தை விட்டு அகலவில்லை. இந்த இரண்டு மணி நேர உரையாடலில் எந்த ஒரு தனிமனிதனைப் பற்றியோ, ஏன் புலவர்களைப்பற்றியோகூட ஒரு வார்த்தையும் பேசப்பெறவில்லை. கவிஞருடைய குருநாதராகிய மகாகவி பாரதியாரின் வாழ்க்கையின் சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறிவிட்டு, அவர் எப்படிப் பாடுவார் என்பதையும் பாரதிதாசன் என்ற கவிஞர் சுப்புரத்தினம் பாடியும் காட்டினார். மகாகவியைப்பற்றிப் பேசும்பொழுது பாரதிதாசன் என்ற கவிஞர் உணர்ச்சிப் பிழம்பாக மாறியதைக் காணமுடிந்தது. ஒரு மனிதர் சமதரையில்லாத வாயிற் படியில் இரண்டு மணி நேரம் குத்துக்கால் இட்டு அமர்ந்திருப்பது ஏறத்தாழ இயலாத காரியம். இந்தப் புரட்சிக் கவிஞர் பெரிய யோகியைப்போல ஒரே நிலையில் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தது என் மனத்தில் பெரு வியப்பை உண்டாக்கியது.

இறுதியாக நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டோம். கி.வா.ஜ.விடம் ‘இந்த இருவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அந்தக் கெட்டிக்கார மனிதர் மிகவும் சமத்காரமாக ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரியவில்லை’ என்று கூறி முடித்துவிட்டார். அதற்குமேல் அந்த உரையாடலைத் தொடர விரும்பாத நான் மேலும் பேசாமல் காரை ஒட்டுவதிலேயே கவனமாக இருந்தேன்.