பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 ♦ நான் கண்ட பெரியவர்கள்



குறிப்பிட்ட ஒரு கட்சிக்காரர்தவிர- தமிழறிஞர்கள் உள்பட- ஏனையோர் கவிஞர் பாரதிதாசனைத் தெரிந்து கொள்ளவும் இல்லை; புரிந்து கொள்ளவும்இல்லை; அவர் ஒரு மாபெரும் கவிஞர் என்பதை அறிந்துகொள்ளவும் இல்லை. இன்னும் பேசப்போனால், அவரைப்பற்றித் தவறாகவே பேசிவந்தனர். ஆனால், இந்தக் கவிஞர் புறத்தே கருத்திருப்பினும், அகத்தே வெளுத்திருப்பவர் என்பதை என்னால் உணர முடிந்தது. ஒரே காலத்தில் ஒரே ஊரில் புறம் வெளுத்து அகம் கருத்து வாழ்ந்த ஒரு துறவியையும் புறம் கருத்து அகம் வெளுத்து மாபெரும் கவிஞராக வாழ்ந்த ஒரு சாதாரணக் குடிமகனையும் கண்டு வந்தேன்.

இதன்பிறகு இடையிடையே கவிஞரைச் சந்தித்துப் பேசினாலும், குறிப்பிடத்தக்கதாக ஒன்றும் இல்லை. கவிஞர் இறப்பதற்குச் சில மாதங்களுக்குமுன்பு என் நண்பர் டாக்டர் தியாகராஜனைப் பார்க்கச் சென்றிருந்தேன். வண்டிக்குள் இருந்த என் காதுகளில் என் பெயரைச் சொல்லி யாரோ இருவர் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. இறங்கிச் சென்று பார்த்தேன். கவிஞரும் அவருடைய மகனும் மருத்துவரைப் பார்க்க வந்து, உள்ளே யாரோ பேசிக்கொண்டிருந்ததால், வெளியே அமர்ந்திருந்தனர். அருகிற் சென்ற நான் ‘என்ன கவிஞரே, நன்றாக இருக்கின்றீர்களா?’ என்று கேட்டவுடன் வழக்கமான புன்முறுவலுடன் ‘அது சரி, அ.ச, நான் உயிரோடு இருக்கும்பொழுது என் கவிதைகளுக்கு ஒரு திறனாய்வு எழுதமாட்டாயா?’ என்று கேட்டார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘கவிஞரே, இப்பிறவிக் கவிஞராகிய உம்முடைய வாயிலிருந்து இப்படிப்பட்ட சொற்கள் வரக் கூடாது. விரைவில் எழுதுகிறேன்’ என்று கூறிவிட்டு, மருத்துவரிடம் சென்று, கவிஞர் கூறியதைக் கூறி, இப்போது ‘அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது’ என்று கேட்டேன். ‘கல்லீரல் பழுதடைந்துவிட்டது. மற்றப்படி ஆபத்து ஒன்றுமில்லை’ என்று கூறவே, திருப்தியுடன் வந்துவிட்டேன்.