பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ♦ 107



ஆனால் மூன்று நான்கு மாதங்களில் கவிஞர் புகழுடம்பு எய்திவிட்டார். எனக்கோ பெருந்துயரம். அந்த மனிதர் விரும்பியடி ஒரு திறனாய்வு நூல் அவர் காலத்தில் எழுத முடியவில்லையே என்ற துயரம் ஆழமாகப் பதிந்திருந்தது.

கவிஞர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு அன்று அமைச்சராக இருந்த பூவராகவன் அவர்கள் தலைமையில் ஓர் இரங்கல் கூட்டம் மயிலை சாஸ்திரி ஹாலில் ஏற்பாடாகியிருந்தது. அமரர் நா.பார்த்தசாரதி முதல் பேச்சாளர்; நான் கடைசிப் பேச்சாளர். இடையில் இரண்டு மூன்று பேர் பேசுவதாக இருந்தது. நல்லறிஞரும் சிறந்த எழுத்தாளரும் என் நண்பருமாகிய நா.பா. அவர்கள் அன்றைக்கு ஏதோ ஒரு வகையான மனநிலையில் (mood) இருந்தார். அது இரங்கல் கூட்டம் என்பதுகூட மனத்தில் கொள்ளாமல் கவிஞரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிவிட்டார். அவர் பெருங்குடிகாரர் என்றும், குடித்து விட்டுக் கடகடவென்று உருள்வார் என்றெல்லாம் பேசி விட்டு அமர்ந்தார். தலைமை வகித்த, திரு.பூவராகவன் அவர்கள் கடைசியில் பேச வேண்டிய என்னை அடுத்துப் பேசி நிலைமையை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். நான் எழுந்து நின்றவுடன், ‘வேறு ஏதோ பணியிருப்பதாக, நா.பா. புறப்பட்டார். என்னையும் அறியாமல், ‘பார்த்தசாரதி, எங்கேயும் புறப்பட வேண்டாம். உட்காருங்கள்’ என்று சொல்லிவிட்டு என் பேச்சைத் தொடங்கினேன். கவிஞர் குடிகாரர் என்ற முறையில் பேசினர்களே, பார்த்தசாரதி, உங்கள் தமிழ்ப் பரம்பரையில் பெண்களே குடித்திருக்கிறார்களே, ‘சிறிய கள் பெரினே, எமக்கு ஈயும் மன்னே’ என்று பாடியவர் சங்ககாலத் தமிழ் மூதாட்டி அவ்வையார் என்பதை மறந்துவிட்டீர்களா, கவிஞரிடம் இந்தக் குறை இருந்தால் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் குடும்பத்தினர்; அதுபற்றி நமக்கு என்ன கவலை? சாகா வரம் பெற்ற கவிதைகளைப்