பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஏடு பார்த்து, ஒப்பு நோக்கி, அற்புதமான நிலையில் வெளியிட்ட ம.பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தூணாக விளங்கினார். அந்நூல்களை வெளியிடுகின்றவரை அவரைத் தலையில் வைத்துப் போற்றிய சைவ அன்பர்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை அவர் வெளியிட முனைந்தவுடன் அவரைக் கீழே போட்டுவிட்டார்கள். மனந்தளராத முதலியாரவர்கள் தம்முடைய பெயரையே மாற்றி ‘மயிலை மாதவதாசன்’ என்ற புனைபெயரில் நாலாயிரத்தையும் திருப்பாவை வியாக்கியானத்தையும் வெளியிட்டார். சுருங்கக் கூறினால், முதல் பிரிவினராகிய சமயவாதிகளின் நிலை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படித்தான் இருந்தது.

அடுத்த பிரிவினர் அரசியல்வாதிகள். பேச்சுத் தமிழைக்கூட நன்கு அறியாத இவர்கள், அரசியல் மேடைகளில் ஆங்கிலத்தில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் பேச்சைக் கேட்கும் சபையோர்களில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள். திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தான் முதலிலும் அடுத்தபடியாக ராஜாஜியும் அரசியல் கூட்டங்களில் தமிழில் பேசத் தொடங்கினார்கள். ஆனாலும், அரசியல் சொற்கள் தமிழில் இன்மையால் இடையிடையே ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாளமாகவே இவர்கள் பேச்சுக்கள் அமைந்தன. இது அன்றைய அரசியல் நிலை.

மூன்றாவது பிரிவினர் தமிழ்ப் புலவர்கள் என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்கள். இவர்களுக்குரிய தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொருவரும் தம் ஒருவரைத் தவிர ஏனையோர் எல்லாரும் தமிழ் அறியாப் போலிகள் என்று கருதிக்கொண்டு தங்களுக்குள் சண்டையில் புகுந்தனர். இந்த அணியில் இலக்கணத்தைமட்டும் கற்றவர் ஒருபுறம் இலக்கியத்தை மட்டும் கற்றவர் ஒருபுறம்