பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 111


இவ்விருசாராருக்குமிடையே கனத்த போராட்டம். ஒருவர் ஏதேனும் ஒரு நூலை நன்கு கற்றிருந்தால் மறந்துகூட மற்றொருவருக்கு அதைச் சொல்லித் தர மாட்டார். இலக்கியம் கற்றவர்களின் நிலை இதுதான். அக்காலகட்டத்தில் மூன்றாவது பிரிவினராகிய புலவர்கள் நிலைமை இதுதான். இந்த மூன்று பிரிவினரும் ஒரு நாளும் ஒன்றுசேர்வதோ கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதோ கனவிலும் நடவாத காரியம்.

இத்தகைய ஒரு காலகட்டத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு கதிரவன் தோன்றினான். அந்தக் கதிரவனுக்குக் கல்யாணசுந்தரம் என்ற பெயரைச் சூட்டினர் பெற்றோர். யாழ்ப்பாணம் கதிரவேல் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்ற திரு.வி.க. இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்து வந்தார். பத்தாவது வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதவேண்டிய அன்றைக்கு அவருடைய குருநாதர் கதிரவேல் பிள்ளை யமனாகத் தோன்றினார். பிள்ளைமேல் தொடரப்பட்ட வழக்கில் அவருக்காகச் சாட்சியம் அளிக்கப் போய்விட்டார் திரு.வி.க. அவருடைய பள்ளிப் படிப்பு அன்றோடு முடிந்தது. இறைவன் திருவிளையாடலைப் புரிந்துகொள்வது நம்போன்ற மனிதருக்கு இயலாத காரியம். திரு.வி.க.வின் பள்ளிக் கல்வி அத்துடன் முடிந்தது என்று அவர் உள்பட பலர் வருந்தியிருக்கலாம். ஆனால், அவர்மூலம் சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் தமிழ்த்தென்றலையும் தமிழ் நாட்டில் உலவ விட வேண்டும் என்று கூத்தப்பெருமான் முடிவு செய்திருந்தான். ஆதலின் பள்ளிப் படிப்பு அத்தோடு முடிந்தது. ஒருவேளை அது தொடர்ந்திருக்குமாயின் அவர் ஒரு பட்டதாரியாகி வெள்ளையரரசில் ஓர் உயர்பதவியில் இருந்திருப்பார். அப்படி ஆகியிருப்பின் தமிழகம் ஈடு இணையற்ற ஒரு சன்மார்க்கியையும் தமிழ்த் தென்றலையும் இழந்திருக்கும். திருவாசகம் வெளிவர, திருவாதவூரரின்