பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



116 ♦ நான் கண்ட பெரியவர்கள்


திரு.வி.க. அவர்கள் ஒர் அற்புதமான உரையாற்றினார். ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே’ என்று வள்ளலாரும், ‘பக்தி வலையில் படுவோன் காண்க’ என்று மணிவாசகப் பெருமானும் கூறினார்கள். ஆனால் இந்த இருவருமே யாருடைய அன்பு, யார் வைத்த வலை என்று சொல்லவில்லை. சைவர்களைமட்டும் இவர்கள் குறித்திருந்தால் சைவர்களின் அன்பு சைவர்களின் வலை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமையால், அன்பு செய்பவர்கள் யாராக இருப்பினும் இறைவன் அவர்கள் விரித்த வலைக்குள் அகப்படுவான் என்றுதானே கூறியுள்ளார்கள்- என்ற முறையில் பேசி முடித்தார். இதன் பிறகு பல ஆண்டுகள் சமாஜத்தார் என்னை அழைக்கவேயில்லை. என்னைப் பொறுத்தவரை என் சமாஜ உறவு திருவதிகையோடு முடிந்துவிட்டது. அப்பொழுது எனக்கு வயது 16. கைதட்டலுக்காகவோ, பிறருடைய போற்றுதலுக்காகவோ சொற்பொழிவு செய்யாமல், மனத்தில் தோன்றிய கருத்தை அப்படியே சொல்வதுதான் சொற்பொழிவுக்கு இலக்கணம் என்பதை அந்த வயதில் எனக்குக் கற்பித்தவர்கள் தமிழ்த் தென்றல் அவர்களும் பல்கலைச் செல்வர் அவர்களுமே ஆவர். அவர்களுக்கு முன்னரும்கூட இரண்டு மூன்று கூட்டங்களில், திரு.வி.க. பேசிய மேடையில் நானும் பேசியுள்ளேன் என்றாலும் எங்கள் உறவு வலுவாகக் கால் கொள்ளத் தொடங்கியது திருவதிகையில்தான். தெ.பொ.மீ அவர்களை இங்குத்தான் முதன்முதலில் சந்தித்தேன். அது பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன். 1932-லிருந்து திரு.வி.க.வுடன் நெருங்கி, மகன் முறையில் பழகினேன். 1940-ல் சென்னைக்கு வந்த பிறகு ஏறத்தாழப் பெரும்பகுதி நேரம் அவருடைய வீட்டிலேயே கழித்தேன். அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை, என் நினைவிலிருந்து மறையாத சிலவற்றை இங்கே குறித்துள்ளேன்.