பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க ♦ 117





ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் திரு.வி.க.விடம் மிக நெருங்கிப் பழகிப் பேரன்பு பூண்டிருந்தார். எனக்குப் பெரியாரை நேரடியாகத் தெரியாது. என்னுடைய கலப்பு மணம் பற்றிக் குடியரசு பத்திரிகையில் எழுதி சிவபூசை செய்கின்ற என் தந்தையாரைப் பற்றிச் சற்றுத் தாழ்வாக எழுதியிருந்தமையின் பெரியார் பற்றிய வெறுப்பு என்னுள் வளர்ந்து வந்தது. இராயப்பேட்டையிலுள்ள தம்முடைய வீட்டின் முன்னர் உள்ள தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் திரு.வி.க. (சின்னையா) அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே சில நாற்காலிகளும் வலப்புறம் ஒரு நீண்ட விசிப்பலகை (bench) போடப்பட்டிருக்கும், அந்தப் பலகையில் நான் அமர்ந்திருப்பேன். அந்தப் பலகைக்குப் பின்னர் ஒரு ஜன்னல் உண்டு. உள்ளே சென்று அந்த ஜன்னல் அருகில் அமர்ந்துவிட்டால் வெளியே பேசிக்கொள்ளும் அனைத்தையும் கேட்க முடியும். இப்பொழுது நான் எழுதப் போவது பெரியார் தொண்டர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் இந்த உரையாடல் நடந்தது உண்மை. இது நடைபெறுகின்ற காலத்தில் பிள்ளையார் சிலையை உடைக்கும் செயல் தமிழகத்தில் பெரிதாக நடந்துகொண்டிருந்தது. பெரியாரைக் கண்ட திரு.வி.க. ‘ஐயா நீங்கள் செய்வது சரியே இல்லை. வினாயகர் சிலையின் தத்துவம் என்ன என்பதைத் தெரியாமல் உடைப்பது எப்படி நியாயம்?’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டார். இப்போது பெரியாரின் விடை எனக்கும். ஏன் சின்னையாவுக்கும்கூட ஓர் அதிர்ச்சியைத் தந்தது. ‘டேய், கல்யாணசுந்தரம், என்ன பயித்தியக்காரன்போல் பேசுகிறாய்? நீ சொல்லும் கோயில் வினாயகரையோ, அரச மரத்தடியில் வைத்து ஜனங்கள் வழிபடும் வினாயகரையோ தொடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறேன். அவனவன் மண்ணிலோ மாக்கல்லிலோ பிள்ளையார் சிலை செய்துகொண்டுவந்து