பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெரியோர்கள் யார்? ♦ 3


பழகியவர்கள் உண்டு. அந்த ஒரு நிலைப்படுத்திய நேரத்தில், பொறிபுலன்கள் செயலற்று நின்றுவிடும்.

மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் போன்றவற்றைச் செய்கின்றவர்கள், இந்த மனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியில் நன்கு தேறியவர்கள். ஆனால் இவர்கள்கூடச் சிந்தையை அடக்கக் கற்றதில்லை. காரணம், சிந்தை மனத்தைப்போல் நம்முடைய அதிகார எல்லைக்குட்பட்ட தன்று. அதனால், பயிற்சி மூலம் அதனை ஒன்றும் செய்துவிட முடியாது. அப்படியானால் வேறு வழியென்ன?

சில பொருள்களைப் பெறவேண்டுமானால் சிலரிடம்தான் செல்ல வேண்டும். இது உலக நியதி. இதையே சற்று நீட்டினால், சிந்தை அடக்கும் செயலை யாரிடம் எங்கே பெறுவது என்ற வினாவிற்கு விடை கிடைக்கும். ஒவ்வோர் உயிருள்ளும் அந்தர்யாமியாய் உறைகின்ற இறைவனை வேண்டிக்கொள்வது தவிர, வேறு வழியில் இதனைப் பெறவே முடியாது. அதாவது, சிந்தையை அடக்க வேண்டும் என்றால், அதற்குள்ள ஒரே வழி, இறைவன் திருவருளை நாடுவதுதான். அப்படி நாடுவதற்குக்கூட அவன் அருள் வேண்டும் என்பதையே அனுபவ ஞானியாகிய மணிவாசகர் ‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ (திருவாச.சிவபுராண-18) என்கிறார். அப்படி வணங்கினால் என்ன கிடைக்கும்? சிந்தை அடங்கும்; அது அடங்கினால் அந்த இடத்தில் யார் இருப்பார்கள்? இவ்வினாவிற்கு விடையாக மணிவாசகப் பெருமானே ‘சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்’ (திருவாச:சிவபுராண-17) என்று பாடுகிறார். ஆக, சிந்தை அடங்கினால் சிவன் அந்த இடத்திற்கு வந்து தங்குவான். மூலப்பொருளே நம் சிந்தைக்குள் வந்துவிட்டதால் நாம் எதனையும் செய்ய முடியும்; ஏனையோர் கற்பனையிற்கூட நினைக்க முடியாத