பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நிரம்பியிருந்தது உண்மைதான். ஆனால் அன்று மாலை என் பேச்சைக் கேட்கச் சகிக்காத திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் எழுந்துபோய்விட்ட நிலையில், கேட்டுக்கொண்டிருந்த மெய்யன்பர்களிடையே சிறுசிறு சலசலப்புத் தோன்றிய நிலையில், எனக்குப் பிறகு பேச எழுந்தார் பல்கலைச் செல்வர். “அவன் பேச்சில் என்ன தவற்றைக் கண்டீர்கள்” என்று தொடங்கி என் பேச்சுக்கு முடிவுரை கூறுவதைப் போல அவர் பேசியதையும் கேட்டேன். அறிமுகம் செய்துவைக்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்த இந்த மனிதரா நம்மை இப்படித் தாங்கிப் பேசுகிறார் என்ற வியப்பு என் மனத்தில்மட்டுமல்ல பலருடைய மனத்திலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்கொரு காரணமுண்டு. திரு.வி.க. அவர்கள்தான் கூட்டத்தின் தலைவரே தவிரத் தெ.பொ.மீ அவர்கள் அல்லர். அவரும் என்னைப்போல் ஒரு பேச்சாளிதான். அப்படியிருந்தும் வயதில் சிறியவனும், பள்ளிக்கூட மாணவனும் ஆகிய என்னைத் தாங்கிப் பேசுவதற்காகத் தம்முடைய தலைப்பையும் விட்டுவிட்டு இப்படிப் பேசினார் என்றால் இவர் ஏனைய சராசரி மனிதர்களைப் போன்றவர் அல்லர்; இவர் ஓர் அசாதாரணமான மனிதர் என்ற எண்ணம் என் மனத்தில் தோன்றியது. அவர் பேசி முடிந்தவுடன் தலைவர் திரு.வி.க. அவர்கள் நாங்கள் பேசியதையே தொடர்ந்து மேலும் அதற்கு மெருகூட்டினார். பழைமை விரும்பிச் சைவர்கள் சிலர் தவிர ஏனையோர் தெ.பொ.மீ. அவர்களின் பேச்சையும், திரு.வி.க. அவர்களின் பேச்சையும் அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

எல்லாம் முடிந்ததும் தெ.பொ.மீ. அவர்களைப் பார்த்துக் “குருதேவா! உங்கள் தலைப்பை விட்டுவிட்டு, எனக்கு ஆதரவாகப் பேசினர்களே! இது சற்றுப் புதுமையானது” என்றேன். அப்போது திரு.வி.க. அவர்களும் பக்கத்தில் இருந்தார்கள். தெ.பொ.மீ என்ற மாமனிதரின் ஒருபுறத்தை அப்பொழுது காணநேர்ந்தது. “ஏப்பா! நீ என்னாப்பா சொல்றே? நான் உன்னைத் தாங்கிப்