பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குருதேவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ♦ 141


பேராசிரியர் பேசினாரோ, அவரையே அழைத்து, மதுரைப் பல்கலைக்கழகத்தில் வேலையும் போட்டுத் தந்தார் குருதேவர். தெ.பொ.மீ என்ற மாமனிதரின் ஒரு பக்கம் இது.

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு முதல் துணை வேந்தராகச் சென்றவர் குருதேவர். ஒரு நாள் ஆட்சிக்குழு (syndicate) கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதுரை அழகர் கோயிற் சாலையிலுள்ள ஒரு சிறிய கட்டிடத்தில்தான் துணைவேந்தர் அலுவலகம் இருந்தது. திடீரென்று கீழே பெரும், கூச்சலும் குழப்பமும், ஒரு முந்நூறு, நானூறு மாணவர்கள் ‘துணைவேந்தர் ஒழிக; தெ.பொ.மீ ஒழிக’ எனறு பெருங்கூச்சலிட்டுக்கொண்டு கீழே கூடிவிட்டனர். இதைக் கண்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களில் மிக முக்கியமான ஒருவர் “ஐயா! மாணவர் குழப்பம். நீங்கள் உள்ளேயே இருங்கள், வெளியே வரவேண்டாம். நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்து இறங்கினார். பாவம் அந்த உறுப்பினர் தெ.பொ. மீ என்ற மனிதரை அறிவாரே தவிர அந்த மனிதருள் மறைந்திருக்கும் தெ.பொ.மீ என்ற ஒரு மாமனிதரை அறியமாட்டார். ஆனால், நடந்தது என்ன? அறைக்குள் இருந்த தெ. பொ. மீ. அவர்கள் மிக வேகமாக இறங்கிவந்தார். எதிரே நின்ற காரின் கூரையின்மேல் ஏறி நின்றார். ‘ஒழிக’ சப்தம் மிகுதியாயிற்று. “ஏப்பா ஒழிக ஒழிக. என்று சொல்றீங்களே நாந்தாப்பா அது. தெ. பொ. மீ என்று சொல்றதும் என்னைத்தான்” என்றார். இப்படி அவர் கூறியவுடன் கூட்டத்தில் அமைதி நிலவிற்று. உடனே தெ. பொ. மீ. “ஒண்னு சொல்றேன் கேளுங்க! எனக்கு வயதாயிடிச்சு. நான் ஒழியத் தயாராய் இருக்கிறேன். நான் ஒழிஞ்சிட்டா உங்களில் யாராவது ஒருத்தருக்கு நன்மை ஏற்படும் என்று நீங்கள் உறுதியா நம்பினா, தயவுசெய்து விவரமாச் சொல்லுங்க, இந்த விநாடியே நான் ஒழியறேன். நல்லா யோசனை பண்ணி யாருக்கு என்ன நன்மை அதனாலே கிடைக்கும்னு நம்புறீங்களோ அதை எடுத்துச்