பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



144 ♦ நான் கண்ட பெரியவர்கள்



காமராஜர் அவர்களோ ஆட்சிக்குப் புதியவர். மனுக்களின் எண்ணிக்கையைக் கண்டு மனம் தளர்ந்துபோன அவர், தெ.பொ.மீ. இந்தப் பதவிக்கு வரக் காரணமாக இருந்தவர் இராஜாஜி, ஆதலால் அவருக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி ஒரு கடிதமெழுதினார். அக்கடிதத்திற்கு அந்தச் சாணக்கியர் எழுதிய ஆங்கிலக் கடிதத்தின் சாராம்சம்: “அன்புள்ள காமராஜ்! தங்கள் கடிதம் கிடைத்தது. தெ.பொ.மீ.க்குத் தமிழில் எம்.ஏ. பட்டம் என்ற அடிப்படைத் தகுதி இல்லை என்பது உண்மைதான். திருவள்ளுவர், இளங்கோவடிகள், சாத்தனார், கம்பர், திருத்தக்க தேவர் என்ற இவர்கள் அனைவருக்கும் தமிழில் அடிப்படைத் தகுதி இல்லைதான். அதனால் என்ன?” என்று கடிதத்தை முடித்துவிட்டார். இக்கடிதத்தைக் கண்ட காமராஜர் பெரிதும் மகிழ்ச்சியடைந்து மனு மூட்டைகளை அவை செல்ல வேண்டிய இடத்திற்கு (குப்பைத் தொட்டி) அனுப்பி விட்டார். குருதேவர் என்ற மாமனிதருக்கு பகை வெளியேயிருந்து வரவில்லை. தமிழ்ப்புலவர்கள், தமிழ் ஆசிரியர்கள் என்பவர்களிடம் இருந்துதான் இது தோன்றி வளர்ந்தது.

இந்த மாமனிதர் படித்துள்ள நூல்களைக் கணக்கிட்டுச் சொல்லுதல் இயலாத காரியம். இப்பெருமகனார் நூல்களைப் படிப்பதைப் பார்ப்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். அக்காலத்தில், ஆண்டுத் தொடக்கத்தில் அந்த வகுப்பிற்குரிய புத்தகங்களைப் பெற்றோர்கள் வாங்கித் தந்தவுடன் மிக அவசரமாக ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து, புதுப் புத்தகத்திற்குரிய மணம் வீசுவதை நாங்கள் அனுபவித்தது உண்டு. எவ்வளவு பெரிய புத்தகத்தையும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்து, அந்த வாசனையைப் பிடித்துக் கொள்வோம். அதேபோல, குருதேவர் அவர்களுக்கு எத்துறையைச் சேர்ந்த எந்த நூலாக இருப்பினும், அது எந்த மொழியிலிருப்பினும் ஒன்றுதான். அந்த நூலை எடுத்து, சில மணி நேரத்தில்