பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



148 ♦ நான் கண்ட பெரியவர்கள்


காலில் கையில் விழுந்து, அவரைக் கூட்டி வந்து விபூதி போடச் சொல்’ என்று சொல்லிவிட்டனர்.

இரவு நேரம் செல்லச் செல்ல, நோயாளியின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. சாஸ்திரியாரின் பதட்டம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அவருக்கு அடுத்த வீட்டில்தான் தெ.பொ.மீ குடியிருந்தார். அவருடைய குடும்பம் சென்னையில் இருக்க வேண்டி நேரிட்டதால், ஒரு சமையற்காரனை வைத்துக்கொண்டு தாம்மட்டும் தனியே குடியிருந்தார். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சாஸ்திரியார் வெறிபிடித்தவர் போல் தெ.பொ.மீ. வீட்டுக் கதவைத் தடதடவென்று தட்டினார். யார் என்று அறியாத சமையற்காரன் கதவைத் திறந்து பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்ததும் அசந்து போனான். மொட்டை மாடியில் ஒரு பாயை விரித்து ஒரு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார் குருநாதர். அவர் காலில் விழுந்த சாஸ்திரியார் நடந்தவையெல்லாம் சொல்லி எப்படியாவது குருதேவர் வந்து திருநீறு போட்டுக் குணப்படுத்த வேண்டும் என்று மன்றாடினார். தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் விபூதி போட்டு யாரையும் குணப்படுத்தியதில்லை என்று எவ்வளவு கூறியும் சாஸ்திரியார் விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குருதேவர் வருவதாக ஒப்புக்கொண்டார்.

சாஸ்திரியார் போனபிறகு அந்த நடு ஜாமத்தில் கேணியில் நீர் இறைத்து தலை முழுகிவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்று நோயாளிக்குத் திருநீறிட்டார். சிறிது நேரம் அமைதியாக நின்றுவிட்டு, வீட்டுக்கு வந்து விட்டார். நோயாளி பிழைத்துவிட்டான் என்ற செய்தி எங்கும் பரவவே பலருடைய மதிப்பில் குருதேவர் உயர்ந்து விட்டார். இந்நிகழ்ச்சி அவர் தம்மையும் அறியாமல் ஈடுபட்ட ஒரு செயலாகும். தம்மையும் அறியாமல் தம்முள் ஒரு சக்தி ஓங்கி வளர்ந்துவருவதை அவர் தெரிந்து கொண்டாரோ என்னவோ, தெரியாது. ஆனால், என்னைப்