பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 149


போன்று நெருங்கிப் பழகியவர்கள் அதனை உணராமல் இருக்க முடியாது.

தந்தை திரு.பொன்னுசாமி அவர்களும், அவருடைய மகனார் தெ.பொ.மீ. அவர்களும் சக்தி உபாசகர்கள். சக்தி வழிபாட்டில் ‘நவாவர்ண பூசை’ என்பதும் ஒன்றாகும். சாதாரணமாக இப்பூசை முடிய இரண்டு அல்லது இரண்டரை மணி நேரமாகும். இப்பூசை முடிந்து தெ.பொ.மீ. அவர்கள், வெளியில் வரும்போது அவரின் முகத்தைப் பார்ப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஒரு பதினைந்து இருபது நிமிடங்களுக்கு அவர் வேறு ஓர் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். எதிரேயுள்ளவர்கள் என்ன பேசினாலும் அவர் காதில் ஏறாது, தாடையைத் தடவிக்கொண்டே ‘ம்..ம்..’ என்று சொல்லுவார். ஆனால் நாம் சொல்லியது எதுவும் அவர் காதில் ஏறவில்லை என்பதை நெருங்கிப் பழகியவர்களே அறிவர். இதுபற்றிய ஒரு சுவையான சம்பவம் இன்னும் என் நினைவில் உள்ளது.

1943 என்று நினைக்கின்றேன். வெள்ளைக்காரர் ஆட்சியில் ஆலோசகர்கள் ( அட்வைசர்ஸ்—Advisers) என்பவர்களின் துணைகொண்டு கவர்னரின் ஆட்சி நடைபெற்ற காலம். அக்காலத்தில் மிகப் பெரிய பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர் கீ.தெய்வசிகாமணி முதலியார் ஆவார். அவர் திரு.வி.க.விடம் நிறைந்த அன்பு கொண்டு ஒவ்வொரு நாள் மாலையும் அவரைப் பார்க்க வருவார். திரு.வி.க.வின் கூடவே இருந்த காரணத்தால் அவர் வரும்போது பல சமயங்களில் நானும் கூடவே இருந்ததுண்டு. ஒரு நாள் திரு.வி.க. அவர்களைப் பார்த்து ‘தெ.பொ.மீ. என்று பலரும் சொல்லுகிறார்களே, அவரைப் பார்க்கவேண்டும்; நாளை அல்லது மறுநாள் வருகிறேன்; என்னை அழைத்துக் கொண்டு போங்கள்’ என்றார். வெள்ளைக்காரப் பாணியில் அதிகம் பழகிய முதலியாரை