பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 151


ஏறி அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். ஓட்டுநர் பக்கத்தில் அமர்வதற்காக நான் காரினைச் சுற்றிச் சென்று கதவைத் திறக்கும்போது... ஓர் அதிசயம் நிகழ்ந்தது! தெ.பொ.மீ. இந்த உலகத்திற்கு இறங்கி வந்துவிட்டார். திரு.வி.க.வையும் என்னையும் தெரியுமாதலால் விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்து, ‘வாங்க வாங்க, எப்ப வந்தீங்க, இவங்க யாரு புதிசா இருக்கு? யாரென்று சொல்லவில்லையே எனக்கு! வாங்க வாங்க இறங்கி வாங்க’ என்றார். நிலைமையை ஓரளவு புரிந்துகொண்ட முதலியார், காரிலிருந்து இறங்கிவர, மூவரும் உள்ளே சென்று அமர்ந்தோம். ஒரு மணி நேரம் உரையாடல் நடந்தது. இச்சந்திப்பின் முற்பகுதியில் கண்ணெதிரே நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒருபகுதிகூடத் தெ.பொ.மீயின் மூளையில் படவில்லை என்பதை அறிந்துகொண்ட முதலியார், அன்று முதல் தெ.பொ.மீ. அவர்களிடம் பெரிதும் அன்புகாட்டிப் பழகினார்.

சிவ பூசை, சக்தி பூசை முதலிய பல பூசைகள் செய்பவர்களை நெடுங்காலமாகக் கண்டுள்ளேன். ‘நாற்பது வருடங்களாகப் பூசனை செய்கிறேன்’ என்று பெருமை யடித்துக் கொள்பவர்களை நான் கண்டுள்ளேன். நாற்பது வருடங்களுக்கு முன் அரிச்சுவடி படிக்கத் தொடங்கியவர்கள், நாற்பது வருட முடிவில் அதே அரிச்சுவடியைப் பெருமையோடு படித்துக் கொண்டிருப்பதற்குச் சமமாகும், இவர்கள் பெருமையடித்துக் கொள்ளும் செயல். புறத்தே செய்யப் படுகின்ற இப்பூசை மன வளர்ச்சியும், ஆன்ம வளர்ச்சியும் பெருகப் பெருக, புளியம்பழத்தின் ஓடுபோல நீங்கிவிடவேண்டும் என்பதை ஏனோ இவர்கள் அறிவதில்லை; இதை யாரேனும் எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குக் கோபம்தான் பொத்துக்கொண்டு வருமே தவிர, சொல்பவர்கள் கூற்றின் உண்மையைப் புரிந்துகொள்வதில்லை.